7க்கு 7 தோல்வி.. சேசிங் செய்யத் தெரியாத இந்தியா 2 மோசமான சாதனை தோல்வி.. தெ.ஆ உலக சாதனை

IND vs RSA 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. ஆனால் 2வது போட்டியில் தென்னாப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. நேற்று முல்லான்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 213/4 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 90 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியைச் சந்தித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 62 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ஓட்னல் பார்ட்மேன் விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

தெ.ஆ உலக சாதனை:

அதனால் 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. அத்துடன் இதையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற உலக சாதனையையும் தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. அந்தப் பட்டியல்:
1. தென்னாப்பிரிக்கா: 13 வெற்றிகள் (33 போட்டிகளில்)*
2. இங்கிலாந்து: 12 (29 போட்டிகளில்)
3. ஆஸ்திரேலியா: 12 வெற்றிகள் (37 போட்டிகளில்)

மறுபுறம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தங்களது பெரிய தோல்வியைச் சந்தித்து மோசமான சாதனை படைத்தது. இதற்கு முன் 2002ஆம் ஆண்டு இந்தூரில் நடைபெற்ற போட்டியில் தெனாப்பிரிக்காவுக்கு எதிராக 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றதே முந்தைய மோசமான சாதனை. மேலும் ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் இந்தியா தங்களது 2வது பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது.

- Advertisement -

7க்கு 7 தோல்வி:

அது மட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா 7வது முறையாக 210க்கும் மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ய முடியாமல் தோற்றுள்ளது. இப்போட்டியையும் சேர்த்து வரலாற்றில் இந்திய அணி 7 போட்டிகளில் 210+ இலக்கை சேசிங் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் அந்த 7 போட்டிகளிலும் இந்தியா 7 தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது. ஒருமுறை கூட வென்றதில்லை.

இதையும் படிங்க: சூரியகுமாரை டம்மியாக்கி.. ஃபுட்பால் மேனேஜர் போல கேப்டன்ஷிப் செய்த கம்பீர்? ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

இதிலிருந்து 210+ ரன்களை சேசிங் செய்யத் தெரியாமல் இந்தியா தொடர்ந்து மோசமான தோல்வியை சந்தித்து வருகிறது என்றே சொல்லலாம். இத்தனைக்கும் தற்போது நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா 210+ ரன்களை கூட சேசிங் செய்ய முடியாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து 3வது போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராக உள்ளது.

Advertisement