
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா போராடி 387 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்து பஸ்பால் ஸ்டைலில் இந்தியாவை புரட்டி எடுத்து 669 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 150, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்ததாக 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் டக் அவுட்டாக்கிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 0/2 என ஆரம்பத்திலேயே திணறிய இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்குமோ என்று ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். அப்போது கேப்டன் கில் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினர்.
4வது நாள் முழுவதும் விக்கெட்டை விடாமல் இந்தியாவை தூக்கி நிறுத்திய அந்த ஜோடியில் ராகுல் 90 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் மறுபுறம் அசத்திய கேப்டன் கில் சதத்தை அடித்து 103 ரன்கள் எடுத்து அவுட்டானதால் ரசிகர்கள் கலக்கமடைந்தனர். ஆனால் அப்போது வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஜோடி சேர்ந்து இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்தனர்.
கடைசி நாள் உணவு இடைவெளிக்கு பின் ஜோடி சேர்ந்த அவர்கள் தேநீர் இடைவெளிக்கு தாண்டி இங்கிலாந்துக்கு தொல்லையை கொடுத்து இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினர். நேரம் செல்ல செல்ல அபாரமாக விளையாடிய அந்த ஜோடி சதத்தை நெருங்கியது. அப்போது இங்கிலாந்து போட்டியை முடித்துக் கொள்ளலாம் என்று கேட்ட போதும் இந்தியா கை கொடுக்கவில்லை.
இறுதியில் ஜடேஜா சதத்தை அடித்து 107*, சுந்தர் 101* ரன்கள் அடித்து 425/4 ரன்களை குவித்த போது இந்தியா போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. அந்த வகையில் இங்கிலாந்திடம் அடங்க மறுத்த இந்தியா தோல்வியிலிருந்து தப்பி கடைசிப் போட்டியில் வென்றால் 2 – 2 (5) என இத்தொடரை சமன் செய்யலாம் என்ற நிலைக்கு வந்துள்ளது. மேலும் இத்தொடரில் இந்தியா மொத்தம் 7 முறை 350க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளது.
இதையும் படிங்க: ஐந்து 50ஸ்.. இந்தியா முன்னிலை.. தோனியை முந்தி சோபர்ஸின் 2 உலக சாதனையை செய்த ஜடேஜா.. சுந்தர் அபாரம்
இதன் வாயிலாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக முறை 350+ ரன்கள் அடித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிராக 6 முறை 3 தொடர்களில் 350+ ரன்கள் (1920/21, 1948, 1989 தொடர்களில்) அடித்ததே முந்தைய சாதனை.