ஒரே மாதத்தில் யாரும் படைக்காத 2 தனித்துவமான சாதனைகளை படைத்த இந்தியா – யாராலும் உடைக்கவும் முடியாது

IND vs PAK Asia Cup
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கியுள்ள ஆசிய கோப்பை 2022 தொடரில் உலகமே எதிர்பார்த்த பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டிகள் ஆகஸ்ட் 28ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுக்க அடுத்து வந்த பகார் ஜமான் 10, இப்திகார் அஹமத் 28 என முக்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

அந்த நிலைமையில் மறுபுறம் போராடிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் அதிகபட்சமாக 43 (42) ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் ஹரிஷ் ரவூப் 13* (7) ரன்களும் தஹானி 16 (6) ரன்களும் எடுத்து ஓரளவு மானத்தை காப்பாற்ற இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்கள் எடுத்தார். அதை தொடர்ந்து 148 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

போராட்ட த்ரில் வெற்றி:
இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு முக்கியமான 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த கேப்டன் ரோகித் சர்மா 12 (18) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களிலேயே விராட் கோலியும் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 35 (29) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் அதிரடியாக காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவும் 18 (18) ரன்களில் அவுட்டானதால் பெரிய பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு 5வது விக்கெட்டுக்கு அசராமல் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா – பாண்டியா ஆகியோர் வெற்றியை உறுதி செய்தனர்.

அதனால் கடைசி ஓவர் வரை சென்ற பரபரப்பான போட்டியில் கடைசி நேரத்தில் ஜடேஜா 2 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (29) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் 4 பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா 33* (17) ரன்களை குவித்து சிக்சருடன் பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.4 ஓவரில் 148/5 ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கடந்த வருடம் இதே துபாயில் உலக கோப்பையில் முதல் முறையாக வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.

- Advertisement -

தனித்துவமனை உலகசாதனை:
இந்த வெற்றிக்கு ஆல்-ரவுண்டராக செயல்பட்ட பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் குரூப் ஏ பிரிவில் 2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ள நடப்புச் சாம்பியன் இந்தியா இந்த ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவக்கியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் பாகிஸ்தானை 150 ரன்களை தொட விடாததே இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து பாகிஸ்தானை தங்களுக்கு கட்டுக்குள் வைத்தனர்.

குறிப்பாக புவனேஸ்வர் குமார் 4, ஹர்திக் பாண்டியா 3, அர்ஷிதீப் சிங் 2, ஆவேஷ் கான் 1 என ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே ஜோடி போட்டு மொத்தமாக எடுத்தனர். இப்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே எடுப்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டியிலும் ரவி பிஷ்னோய் 4, அக்சர் படேல் 3, குல்தீப் யாதவ் 3 என எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் சுழல் பந்துவீச்சாளர்களே சேர்ந்து எடுத்தனர். ஆச்சரியப்படும் வகையில் அதற்கடுத்த படியாக நேற்று களமிறங்கிய பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே மாதத்தில் அதுவும் அடுத்தடுத்த போட்டிகளில் எதிரணியின் 10 விக்கெட்டுக்களை சுழல் பந்து வீச்சாளர்களும் வேகப்பந்து வீச்சாளர்களும் இணைந்து எடுத்த முதல் அணி என்ற தனித்துவமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. வரலாற்றில் வேறு எந்த அணியும் இதுபோல் ஒரு போட்டியில் சுழல் பந்துவீச்சாளர்கள் இணைந்து எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் அதற்கடுத்த போட்டியிலேயே வேகப்பந்து வீச்சாளர்கள் இணைந்து 10 விக்கெட்டுகளையும் எடுத்தது கிடையாது. அப்படி அரிதினும் அரிதாக அதுவும் ஒரே மாதத்தில் ஒரே காலண்டர் வருடத்தில் இந்தியா படைத்துள்ள இந்த சாதனையை இனிமேல் அவ்வளவு எளிதில் வேறு எந்த அணியும் படைக்க முடியாது என்றே கூறலாம்.

Advertisement