ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் செப்டம்பர் 20ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 208/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் 55 (35) ரன்களும் சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும் ஹர்திக் பாண்டியா 71* (30) ரன்களும் விளாசினர். அதைத் தொடர்ந்து 209 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் ஆரோன் பின்ச் 22 (13), ஸ்டீவ் ஸ்மித் 35 (24), கிளென் மேக்ஸ்வெல் 1 என முக்கிய பேட்ஸ்மேன் குறைவான ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

இருப்பினும் இந்திய பவுலர்கள் பந்தாடிய மற்றொரு இளம் தொடக்க வீரர் கேமரூன் கிரீன் அதிரடியாக 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 61 (30) ரன்கள் எடுக்க இறுதியில் மேத்யூ வேட் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 45* (21) ரன்களைக் குவித்து பினிஷிங் செய்து வெற்றி பெற வைத்தார். அதனால் எளிதாக வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா தங்களை டி20 சாம்பியன் என நிரூபித்துள்ளது.
சொந்த மண்ணில் திணறல்:
மறுபுறம் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு பந்து வீச்சில் அக்ஷர் பட்டேல் தவிர எஞ்சிய அனைவரும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கியதால் தலை குனியும் தோல்வியை சந்தித்த இந்தியா சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரை வெல்ல எஞ்சிய 2 போட்டிகளில் வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் தொடர் வெற்றிகளை பெற்றதால் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது.

ஆனால் சமீபத்தில் 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற ஆசிய கோப்பையில் வழக்கம்போல அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் சொதப்பி பைனலுக்கு கூட செல்லாமல் கோப்பையை தவறவிட்ட இந்தியா நிறைய விமர்சனங்களை சந்தித்தது. மேலும் அந்தத் தொடரில் தீபக் சஹரை தேர்வு செய்யாதது, புவனேஸ்வர் குமாரை 19வது ஓவரில் பயன்படுத்தியது போன்ற தவறுகளை செய்து தோல்வியை சந்தித்த இந்தியா அதிலிருந்து பாடத்தை கற்காமல் மீண்டும் இப்போட்டியில் அதே தவறை செய்தது நிறைய ரசிகர்கள் கடுப்பாக வைத்துள்ளது.
அலறவிடும் ஆஸ்திரேலியா:
இந்நிலையில் பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் நியூஸிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு எதிராக நடைபெற்ற இருதரப்பு டி20 தொடர்களில் அசால்ட்டாக 3 – 0 (3) என்ற கணக்கில் அடுத்தடுத்த வைட்வாஷ் வெற்றிகளை பதிவு செய்தது. ஆனால் வலுவான ஆஸ்திரேலியாவிடம் 5 வருடங்களாக இந்தியாவின் ஆட்டம் செல்லுபடியாகாமல் இருந்து வருகிறது. ஆம் கடந்த 2017இல் இதேபோல் இந்தியாவில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்றாலும் 2வது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியாவை 3வது போட்டியில் மழை தடுத்து நிறுத்தியது.

அதனால் 1 – 1 (3) என்ற கணக்கில் சமனடைந்த அந்த தொடருக்குப் பின் கடந்த 2019இல் இந்தியாவில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மிரட்டிய ஆஸ்திரேலியா 2 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. அதன்பின் தற்போது மொஹாலியில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்துள்ள ஆஸ்திரேலியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வலுவான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 4 தொடர்ச்சியான போட்டிகளில் தோற்கடித்த முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
மோசமான உலகசாதனை:
அதைவிட கடந்த ஜூன் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற டி20 போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையில் 200+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோற்ற இந்தியா தற்போது ரோகித் சர்மா தலைமையில் 2வது முறையாக 200+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோற்றது.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் சொந்த மண்ணில் 2 முறை 200+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான உலக சாதனையும் இந்தியா படைத்தது. பொதுவாக 200 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் வெற்றி என்ற நிலையில் அதை சொந்த மண்ணில் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் இந்தியா உலகக்கோப்பையை வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது.



