IND vs ZIM : விக்கெட் இழப்பின்றி ஜிம்பாப்வேயை வெளுத்து வாங்கிய இந்திய அணி – வெற்றி பெற்றது எப்படி?

- Advertisement -

ஜிம்பாப்வேவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள இந்த தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்கியுள்ளது. அதில் தலைநகர் ஹராரேயில் ஆகஸ்ட் 18-ஆம் தேதியான இன்று இந்திய நேரப்படி மதியம் 12.45 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வேவுக்கு நீண்ட நாட்கள் கழித்து காயத்திலிருந்து திரும்பிய தீபக் சஹர் அனலாக பந்துவீசி இன்னசென்ட் கயா 4, மருமணி 8, மதவேரே 5 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட் செய்தார்.

அதனால் 31/3 என மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் கைகொடுக்க வேண்டிய சீன் வில்லியம்ஸ் 1, சிகந்தர் ராசா 12, ரியன் புர்ள் 11 என முக்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். அதனால் 83/6 என திணறிய அந்த அணி 100 ரன்களை தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட போது பொறுப்புடன் செயல்பட்ட கேப்டன் சகப்வா அதிகபட்சமாக 35 (51) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மிரட்டிய இந்தியா:
இறுதியில் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ராட் எவன்ஸ் மற்றும் ரிச்சர்ட் ங்கரவா ஆகியோர் பொறுப்புடனும் செயல்பட்டு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி ஒருநாள் கிரிக்கெட்டில் 9வது விக்கெட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் அமைத்து ஜிம்பாப்வே ஜோடி என்ற பெருமை பெற்றது. அதில் ங்கரவா 34 (42) ரன்களில் அவுட்டாக மறுபுறம் 3 பவுண்டரி 1 சிக்சருடன் ப்ராட் எவன்ஸ் 33* (29) ரன்கள் எடுத்தாலும் எதிர்ப்புறம் வந்த வீரர்கள் அவுட்டானதால் 40.3 ஓவரில் ஜிம்பாப்வே வெறும் 189 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக தீபக் சஹர், அக்சர் படேல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 190 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கேஎல் ராகுல் தனது இடத்தை சுப்மன் கில்லுக்கு விட்டுக் கொடுத்தார். சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒயிட்வாஷ் செய்வதற்கு முக்கிய பங்காற்றிய இந்த ஜோடி நல்ல பார்மில் இருப்பதால் ஜிம்பாப்வேயின் கத்துக்குட்டி பவுலர்களை அசால்டாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது.

- Advertisement -

இந்தியா வெற்றி:
பவர்பிளே முடிந்தும் மிகச் சிறப்பாக செயல்பட்ட இவர்கள் ஜோடி போட்டு ஜிம்பாப்வே பவுலர்களுக்கு வளைந்து கொடுக்காமல் இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். ஒரு கட்டத்தில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதம் கடந்து சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடியை பிரிக்க ஜிம்பாப்வே போட்ட திட்டங்களை செல்லாத அளவுக்கு அட்டகாசமாக பேட்டிங் செய்த இவர்கள் கடைசி வரை அவுட்டாகாமல் அந்த அணியை வெளுத்து வாங்கி 30.5 ஓவரில் 192/0 ரன்களை எடுக்க வைத்து இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற வைத்தனர்.

192 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி உறுதி செய்த இந்த ஜோடியில் நிதானத்தை காட்டிய ஷிகர் தவான் 9 பவுண்டரியுடன் 81* (113) ரன்களும் அதிரடி காட்டிய கில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 82* (72) ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தனர். என்னதான் சமீபத்தில் சொந்த மண்ணில் வங்கதேசத்தை ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வென்று நல்ல பார்மில் இருந்தாலும் 2வது தர இந்திய அணியை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு ஜிம்பாப்வே இன்னும் கத்துக்குட்டியாகவே இருப்பது இப்போட்டிக்கு எடுத்துக்காட்டாகும்.

முதலில் பேட்டிங்கில் தீபக் சஹர் போன்ற தரமான பவுலர்களின் பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணி பேட்டிங்கில் 189 ரன்களுக்கு சுருண்ட போதே தோல்வி உறுதியாகிவிட்டது. அந்த அணிக்கு டெயில் எண்டர்கள் 9ஆவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததை போல் டாப் மற்றும் மிடில் ஆர்டரில் சிக்கந்தர் ராசா போன்ற முக்கிய வீரர்கள் யாராவது ஒருவர் 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் கூட 250 போன்ற வெற்றிக்காக போராடக்கூடிய இலக்கை நிர்ணயித்திருக்க முடியும்.

அதனால் பேட்டிங்கில் சொதப்பி வெற்றி பெற முடியாது என்ற வகையில் மனதை விட்ட அந்த அணி பந்துவீச்சிலும் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத அளவுக்கு சுமாராகவே செயல்பட்டது. மறுபுறம் இதைவிட வலுவான வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் சமீபத்திய தொடரில் வீழ்த்தியதை போல் மீண்டும் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement