211 ரன்ஸ்.. மந்தனா மெகா உலக சாதனை.. வெ.இ அணியை மிரட்டிய இந்தியாவும் உலக சாதனை வெற்றி

IND vs WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் இந்திய மகளிரணி வென்றது. அதை அடுத்து அவ்விரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. அந்தத் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 22ஆம் தேதி வதோதராவில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்து 23.2 ஓவர்கள் வரை விளையாடிய பிரதிகா ராவல் 40 ரன்கள் குவித்து அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்த அசத்திய மந்தனா அரை சதமடித்தார்.

- Advertisement -

மந்தனா சாதனை:

அதனால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 13 பவுண்டரியுடன் 91 (104) ரன்கள் குவித்து அவுட்டானார். இதையும் சேர்த்து இந்த வருடம் நடைபெற்ற மகளிர் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக அவர் 1602 ரன்கள் குவித்துள்ளார். அதன் வாயிலாக மகளிர் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற மாபெரும் உலக சாதனையை மந்தனா நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன் இதே வருடம் தென்னாப்பிரிக்காவின் லாரா வால்வார்ட் 1593 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அந்தப் பட்டியலில் 2022இல் 1346 ரன்கள் குவித்த இங்கிலாந்தின் நட் ஸ்கீவர் 3வது இடத்தில் உள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஹர்லீன் தியோல் 44, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 34, ரிச்சா கோஸ் 26, ஜெமிமா ரோட்ரிகஸ் 31, தீப்தி சர்மா 14* ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

அதனால் 50 ஓவரில் இந்தியா 314-9 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 315 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ்க்கு கேப்டன் ஹைலே மேத்தியூஸ் 0, குயினா ஜோசப் 0, வில்லியம்ஸ் 3, டீன்ட்ரா டோட்டின் 8 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தார்கள். அதனால் 11-4 என ஆரம்பத்திலேயே சரிந்த வெஸ்ட் இண்டீஸை தொடர்ந்து மிரட்டலாக பந்து வீசிய இந்தியா 26.2 ஓவரில் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.

இதையும் படிங்க: 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆகாஷ் தீப் சந்தித்துள்ள காயம் – அடுத்த போட்டியில் பங்கேற்பாரா?

அதிகபட்சமாக கேம்பல் 21, அபி பிளட்சர் 24* ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரேணுகா சிங் 5, ப்ரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அதனால் 211 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக பெரிய வெற்றியை பதிவு செய்த அணியாக உலக சாதனை படைத்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு முன் 2019ஆம் ஆண்டு லீசெஸ்டர் நகரில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இங்கிலாந்து 208 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனை.

Advertisement