வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா ஏற்கனவே தொடரையும் கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலைமையில் இத்தொடரின் கடைசி போட்டி ஆகஸ்ட் 7-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் ப்ளோரிடாவில் துவங்கியது. சம்பிரதாய போட்டி என்பதால் கேப்டன் ரோகித் சர்மா, புவனேஸ்வர் குமார், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகிய 4 முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹர்டிக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு நீண்ட நாட்களுக்கு பின் வாய்ப்பு பெற்ற இஷான் கிசான் அதைப் பயன்படுத்தாமல் தடுமாறி 11 (13) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடாவுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் ஷ்ரேயஸ் ஐயர் இம்முறை டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடாமல் அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டார். 11.4 ஓவர்கள் வரை சிறப்பாக பேட்டிங் செய்த இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய போது தீபக் ஹூடா 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38 (25) ரன்களில் ஆட்டமிழந்தார்.
மீண்டும் அசத்தல்:
அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் 8 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்டு அரைசதம் கடந்த ஸ்ரேயாஸ் ஐயர் 64 (40) ரன்களில் அவுட்டானார். அப்போது மின்னலுடன் நிலவிய மோசமான வானிலையால் சில நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டு துவங்கிய நிலையில் அடுத்ததாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 பவுண்டரியுடன் 15 (11) ரன்களும் தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரி 12 (9) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் மிடில் ஆர்டரில் தடுமாறிய இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 2 சிக்சருடன் 28 (16) ரன்களும் அக்ஷர் பட்டேல் 9 (7) ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் 188/7 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஓடென் ஸ்மித் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதை தொடர்ந்து ஆறுதல் வெற்றி பெறுவதற்காக 189 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு ஆச்சரியப்படும் வகையில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க மற்றொரு தொடக்க வீரர் சமர் ப்ரூக்ஸ் 13 (13) ரன்களில் நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய டேவோன் தாமஸ் 10 (11) ரன்களிலும் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 3 (6) ரன்களிலும் அவுட்டானதால் 10 ஓவர்களில் அந்த அணி 64/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்றது.
போராடிய ஹெட்மயர்:
அந்த நிலைமையில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய நட்சத்திர வீரர் சிம்ரோன் ஹெட்மையர் அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டு தனது அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் எதிர்புறம் ரோவ்மன் போவல் 9 (13) கீமோ பால் 0 (1) ஆகியோர் ரவி பிஷ்னோய் விசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். போதாகுறைக்கு அடுத்து வந்த டாமினிக் ட்ரெக்ஸ் 1 (2) ஓடென் ஸ்மித் 0 (3) ஆகியோரும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினர்.
அதனால் மறுபுறம் வெற்றிக்காக போராடிய சிம்ரோன் ஹெட்மையர் 5 பவுண்டரி 4 சிக்சருடன் அரைசதம் கடந்து 56 (35) ரன்களில் அவுட்டாக அடுத்த சில பந்துகளிலேயே கடைசி விக்கெட்டாக ஓபேத் மெக்காய் டக் அவுட்டானார். அதனால் 15.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் வெறும் 100 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மீண்டும் படுதோல்வியை சந்தித்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இந்தியா வெற்றி:
இப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் பேட்டிங்கில் ஷ்ரேயஸ் ஐயர், ஹூடா, பாண்டியா ஆகியோரின் அதிரடியால் 188 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து மனதளவில் தோற்ற காரணத்தால் இப்போட்டியிலும் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீட்டுக்கட்டு சரிவது போல சீரான இடைவெளிகளில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.
இத்தனைக்கும் தரமான அதிரடி வீரர்கள் இருந்த போதிலும் சிம்ரோன் ஹெட்மையருடன் பார்ட்னர்ஷிப் போட யாருமே ஆதரவு கொடுக்காமல் பொறுப்பின்றி மீண்டும் செயல்பட்டது சொந்த மண்ணில் அந்த அணிக்கு மீண்டும் ஒரு அவமான தோல்வியை பரிசளித்தது. அந்தளவுக்கு மீண்டும் அசத்தலாக செயல்பட்ட இந்தியா இந்த தொடரில் முதல் 4 போட்டிகளை காட்டிலும் 88 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று 4 – 1 (5) என்ற கணக்கில் இந்த டி20 தொடரை வென்று வெற்றிக் கோப்பையுடன் இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப தயாராகியுள்ளது.



