IND vs WI : இந்தியாவின் யுக்தியை பின்பற்ற முயன்ற வெ.இண்டீஸை மடக்கிய பவுலர்கள், தொடரை கைப்பற்றியது எப்படி – முழுவிவரம்

IND vs WI T20I
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் 4வது போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருக்கும் ரீஜினல் பார்க் மைதானத்தில் ஆகஸ்ட் 6-ஆம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கியது. ஆனால் மோசமான வானிலை காரணமாக இரவு 8.45 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அதிரடியான பவுண்டரிகளை விளாசி 53 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 2 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்கவிட்டு 33 (16) ரன்களில் அவுட்டானார்.

அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 24 (14) ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அதனால் 5.3 ஓவரில் 61/2 என்ற தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவின் அதிரடியை அடுத்ததாக ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் குறையாமல் பார்த்துக் கொண்டனர். அதில் தீபக் ஹூடா 2 பவுண்டரியுடன் 21 (19) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் 6 பவுண்டரிகளை பறக்கவிட்ட ரிஷப் பண்ட் 44 (31) ரன்களில் அவுட்டாகி அரை சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

- Advertisement -

அசத்திய இந்தியா:
அந்த சமயத்தில் களமிறங்கிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 6 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மறுபுறம் அதிரடியாக பேட்டிங் செய்த சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 30* (23) ரன்களும் கடைசி நேரத்தில் களமிறங்கி 1 பவுண்டரி 2 சிக்சரை பறக்கவிட்ட அக்சர் படேல் 20* (8) ரன்களும் எடுத்து நல்ல பிஷிங் கொடுத்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 191/5 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஓபேத் மெக்காய் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 192 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு 3 பவுண்டரியுடன் 13 (8) ரன்கள் எடுத்த பிரண்டன் கிங்கை 13 (8) ரன்களில் அவுட்டாக்கிய ஆவேஷ் கான் அடுத்து களமிறங்கிய தேவோன் தாமஸை 1 (4) ரன்னில் காலி செய்தார். அதனால் 22/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற தனது அணிக்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் அக்ஷர் பட்டேல் வீசிய 5-வது ஓவரில் 4, 4, 6, 6 என வெறித்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும் பொறுப்பை காட்டாமல் அதே ஓவரில் 24 (8) ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

பவுலர்கள் அசத்தல்:
போதாகுறைக்கு அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 14 (16) ரன்களில் அவுட்டாகி சென்ற போது அடுத்ததாக களமிறங்கிய ரோவ்மன் போவலும் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 24 (16) ரன்கள் எடுத்தாலும் பொறுப்பை காட்டாமல் அதற்கடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதனால் 82/5 என பாதி சரிந்த அந்த அணிக்கு ஜேசன் ஹோல்டர் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 13 (9) ரன்களிலும் அகில் ஹொசைன் 3 (10) ரன்களிலும் பொறுப்பின்றி அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

அதனால் மேலும் சரிந்த அந்த அணியை காப்பாற்றுவார் என கருதப்பட்ட நட்சத்திர பேட்ஸ்மேன் சிம்ரோன் ஹெட்மையரும் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 19 (19) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்ததால் அந்த அணியின் கதையும் முடிந்தது. ஏனெனில் அடுத்து வந்த வீரர்களும் இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சில் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 19.1 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வெறும் 132 ரன்களுக்கு சுருண்டதால் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளையும் அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தாலும் அதற்கேற்றார் போல் செயல்படாமல் சுமாராகவே பந்து வீசியது.

இந்தியாவின் யுக்தி:
அதைப் பயன்படுத்திய இந்திய பேட்ஸ்மேன்களில் தினேஷ் கார்த்திக் தவிர ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உட்பட அத்தனை பேட்ஸ்மேன்களும் அரை சதமடிக்கவில்லை என்றாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதிரடியை கொஞ்சமும் குறைக்காமல் நல்ல ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை விளாசி 191 ரன்களை சேர்த்தது இந்திய பவுலர்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. ஏனெனில் கட்டுப்படுத்துவதற்கு அதிக ரன்கள் இருந்ததால் தைரியத்துடன் பந்து வீசிய பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து அழுத்தத்தை கொடுத்தனர்.

அதனால் ரன்ரேட்டை கட்டுப்படுத்த இந்தியாவைப் போலவே அரை சதம் அடிக்கவில்லை என்றாலும் அதிரடியாக அடிக்கலாம் என நினைத்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் தரமான இந்திய பந்துவீச்சில் யாருமே 30 ரன்களை கூட தாண்டாததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. அந்த அளவுக்கு இப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சரியான அணுகுமுறையை கையாண்ட இந்தியா ஒருநாள் தொடரை போலவே 3 – 1* (5) என்ற கணக்கில் இந்த டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

Advertisement