- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆசிய கோப்பை 2024 : 201 ரன்ஸ்.. ரிச்சா வரலாற்று சாதனை.. மாபெரும் சாதனையுடன் அமீரகத்தை வீழ்த்திய இந்தியா

இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்ற வருகிறது. அந்தத் தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்புச் சாம்பியன் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய 2வது போட்டியில் ஐக்கிய அரபு நாடுகளை எதிர்கொண்டது. அப்போட்டி ஜூலை 21ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1:00 மணிக்கு இலங்கையில் உள்ள தம்புலா நகரில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற அமீரக அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருத்தி மந்தனா அதிரடியாக விளையாட முயற்சித்து 13 (9) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் அடித்து நொறுக்கிய ஷபாலி வர்மா 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 37 (18) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

சாதனை வெற்றி:
3வது இடத்தில் களமிறங்கிய ஹேமலதா தடுமாறி 2 ரன்னில் அவுட்டானார். அதைத்தொடர்ந்து மிடில் ஆடரில் கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் ஜெமிமா ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் 4வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் தடுமாற்றமாக விளையாடிய ஜெமிமா 14 (13) ரன்களில் அவுட்டானார்.

ஆனால் அடுத்ததாக வந்த ரிச்சா கோஸ் அமீரக பவுலர்களை சரவெடியாக எதிர்கொண்டு மிரட்டலாக பேட்டிங் செய்தார். அவருடன் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் அரை சதமடித்து 66 (47) ரன்களில் ரன் அவுட்டானார். ஆனால் இந்த பக்கம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கி ரிச்சா கோஸ் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 64* (29) ரன்களை 220.69 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

இதன் வாயிலாக மகளிர் ஆசிய கோப்பையில் அரை சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார். அத்துடன் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான மகளிர் கிரிக்கெட்டிலும் அரை சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பராகவும் ரிச்சா கோஸ் வரலாற்று சாதனை படைத்தார். அவரது அதிரடியால் 20 ஓவரில் இந்தியா 201/5 ரன்கள் குவித்தது.

இதன் வாயிலாக சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு போட்டியில் 200 ரன்கள் அடித்த இந்தியா அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2018இல் மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 198 ரன்கள் அடித்ததே இந்தியாவின் முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும். அமீரகம் சார்பில் அதிகபட்சமாக கவிசா ஈகோடேஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையும் படிங்க: பிட்னஸ்ஸ சரி பண்ணுங்க கம்பீர் கொடுத்த அட்வைஸ்.. முன்கூட்டியே பதிலளித்துள்ள ஹார்டிக் பாண்டியா – விவரம் இதோ

அதைத்தொடர்ந்து 202 ரன்களை துரத்திய அமீரக அணி எதிர்ப்பார்த்ததை போலவே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 20 ஓவரில் 123/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கவிசா ஈகோடேஜ் 40* (32), கேப்டன் ரோஹித் ஓசா 38 (36) ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2வது வெற்றியை பதிவு செய்து இத்தொடரில் செமி ஃபைனல் செல்வதற்கான வாய்ப்பை 90% உறுதி செய்துள்ளது.

- Advertisement -