துபாயில் அண்டர்-19 ஆசியக் கோப்பை 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதி துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் இந்தியா – ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே 4 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் மறுபுறம் அமீரக பவுலர்களை அடித்து நொறுக்கிய வைபவ் சூரியவன்சி அரை சதமடித்தார். அடுத்து வந்த ஆரோன் ஜார்ஜ் அவருடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 218 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து 69 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
2 வரலாற்று சாதனை:
அடுத்து வந்த விகான் ல்கோத்ரா தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து தொடர்ந்து பட்டாசாக விளையாடிய சூரியவன்சி 56 பந்துகளில் சதமடித்தார். நேரம் செல்ல செல்ல சிறப்பாக விளையாடிய அவர் 9 பவுண்டரி 14 சிக்ஸருடன் 171 (95) ரன்களை 180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஒரு வழியாக அவுட்டானார்.
அடுத்து வந்த வேதாந்த் திரிவேதி தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 38 (34) ரன்கள் குவித்து அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய விகான் மல்கோத்ரா அரை சதமடித்து 69 (55) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் அபிஞான் குண்டு 32* (17), கனிஸ்க் சௌஹான் 28 (12), கிளன் பட்டேல் 5* (4) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர்.
மெகா வெற்றி:
அதனால் 50 ஓவரில் அமீரகத்தை சூறையாடிய இந்திய அண்டர்-19 அணி 433/6 ரன்கள் குவித்து அசத்தியது. இதன் வாயிலாக அண்டர்-19 ஆசியக் கோப்பை வரலாற்றில் 400 ரன்கள் அடித்த முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது. அத்துடன் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.
இதையும் படிங்க: சுப்மன் கில்லின் பேட்டிங் பார்ம் குறித்த கவலை எங்களுக்கு இல்லை.. காரணத்தை கூறிய – ஆஷிஷ் நெஹ்ரா
இதற்கு முன் 2012 அண்டர்-19 ஆசியக் கோப்பையில் கத்தாருக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் 363/7 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அமீரக அணிக்கு அதிகபட்சமாக அதிகபட்சமாக யுக் சர்மா, யுதீஸ் சுரி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய அமீரக அண்டர்-19 அணி 50 ஓவரில் முடிந்தளவு போராடியும் 199/7 ரன்கள் எடுத்து தோற்றது. அதிகபட்சமாக பிரிதிவி மது 50, யுதீஸ் சுரி 78* ரன்கள் எடுத்தார்கள். மறுபுறம் 234 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அதிகபட்சமாக தீபேஸ் திபேந்திரன் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.



