அண்டர்-19 ஆசிய கோப்பை: 13 வயது வீரர் 24 பந்தில் 50.. இலங்கையை நாக் அவுட் செய்த இந்தியா.. ஃபைனலில் யார்?

IND vs SL
- Advertisement -

சார்ஜாவில் 2024 அண்டர் 19 ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது செமி ஃபைனல் போட்டியில் லீக் சுற்றில் அசத்திய இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய இலங்கை தடுமாற்றமாக பேட்டிங் செய்தது.

அந்த வகையில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 46.2 ஓவரில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சண்முகநாதன் 42, லக்வின் அபிசிங்கே 69 ரன்கள் எடுத்தார்கள். இந்தியா அண்டர் 19 அணிக்கு அதிகபட்சமாக சேட்டன் சர்மா 3, ஆயுஷ் மாத்ரே 2, கிரண் கோர்மேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

- Advertisement -

ரகுவன்ஷி அசத்தல்:

பின்னர் 174 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு ஆயுஷ் மாத்ரே – வைபவ் சூரியவன்சி ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினார்கள். குறிப்பாக சூரியவன்சி பவர் பிளே ஓவர்களில் சுமாராக பந்து வீசிய இலங்கை பவுலர்களை அதிரடியாக வெளுத்து வாங்கினார். தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் 24 பந்துகளில் அரை சதத்தைத் தொட்டு அசத்தினர்.

அவருடன் சேர்ந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த மாத்ரே 34 (28) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய சூரியவன்சி 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 67 (36) ரன்களை 186.11 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். வெறும் 13 வயது மட்டுமே நிரம்பிய அவர் அமீரகத்துக்கு எதிரான கடந்த போட்டியிலும் 76* (46) ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

ஃபைனலில் இந்தியா:

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மிடில் ஆர்டரில் ஆண்ட்ரே சித்தார்த் 22 (27), கேப்டன் முகமத் அமன் 25* (26), கார்த்திகேயா 11* (14) ரன்கள் எடுத்தார்கள். அதனால் 21.4 ஓவரிலேயே 175-3 ரன்கள் எடுத்த இந்திய அண்டர் 19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் இலங்கை அணியை இத்தொடரில் இருந்து நாக் அவுட் செய்த இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது.

இதையும் படிங்க: இந்தியா 87/5 டூ 180.. 6 சிக்ஸ்.. கை கொடுத்த நிதிஷ் ரெட்டி.. அதற்குள் தோனி, கோலி, கங்குலியை முந்தி அபாரம்

வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரகுவன்சி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே போல முதல் செமி ஃபைனலில் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் தோற்கடித்தது. இதைத் தொடர்ந்து இந்த தொடரின் இறுதிப்போட்டி டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. துபாயில் நடைபெறும் அந்தப் போட்டியில் வங்கதேச அணியை இந்தியா எதிர்கொண்டு விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement