140/1 என படமெடுத்த இலங்கை.. 5.2 ஓவரில் 9 விக்கெட்ஸ்.. அசால்டாக சாய்த்த இந்தியா.. சூர்யகுமார் தலைமையில் மாஸ் வெற்றி

IND vs SL 11
- Advertisement -

இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி ஜூலை 27ஆம் தேதி இலங்கையின் தம்புலா நகரில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதில் ஜெய்ஸ்வால் 40 (21) ரன்களும் சுப்மன் கில் 34 (16) ரன்களும் குவித்து அவுட்டானார்கள். அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் 3வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினர்.

- Advertisement -

அபார வெற்றி:
அதில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 58 (26) ரன்கள் விளாசி அவுட்டானார். அதே போல மறுபுறம் தம்முடைய பங்கிற்கு அசத்தலாக விளையாடிய ரிஷப் பண்ட் 49 (33) ரன்கள் குவித்து அரை சதத்தை நழுவ விட்டு அவுட்டானார். இறுதியில் ஹர்திக் பாண்டியா 9, ரியான் பராக் 7, ரிங்கு சிங் 1 ரன்னில் அவுட்டானாலும் அக்சர் படேல் 10* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இந்தியா 213/7 ரன்கள் குவித்தது.

இலங்கை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 214 ரன்களை துரத்திய இலங்கைக்கு பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். ஓவருக்கு 10 ரன்கள் குவித்து இந்திய பவுலர்களை வெளுத்த அந்த ஜோடி 84 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கைக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தது.

- Advertisement -

அதில் குசால் மெண்டிஸ் 45 (27) ரன்களில் அர்ஷ்தீப் வேகத்தில் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த குசால் பெரேராவுடன் ஜோடி சேர்ந்த நிசாங்கா தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். அதனால் 14 ஓவரில் 140/1 ரன்கள் எடுத்த இலங்கை வெல்வதற்கான வாய்ப்பு அதிகரித்தது. ஆனால் அப்போது நிசாங்காவை 79 (48) ரன்களில் போல்ட்டாக்கிய அக்சர் படேல் அதே ஓவரில் பெரேராவையும் 20 (14) ரன்களில் காலி செய்து திருப்புமுனையை உண்டாக்கினார்.

அடுத்து வந்த கேப்டன் அசலங்கா, சனாகா அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த கமிந்து மெண்டிஸ் 12 (8) ரன்களில் ரியான் பராக் சுழலில் சிக்கினார். இறுதியில் 19.2 ஓவரிலேயே இலங்கையை 170 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையும் படிங்க: 213 ரன்ஸ்.. மிரட்டிய சூர்யகுமார்.. அசத்திய பதிரனா.. 1 ரன்னில் வரலாற்று சாதனையை தவற விட்ட பண்ட்

குறிப்பாக கடைசி 5.2 ஓவரில் 30 ரன்கள் மட்டும் கொடுத்த இந்தியா 9 விக்கெட்டுகள் எடுத்து அசால்ட்டாக வென்றது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரியான் பராக் 3, அக்சர் படேல் 2, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்த வகையில் புதிய கேப்டன் சூரியகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.

Advertisement