ஐசிசி மகளிர் உ.கோ: 124/6 டூ 269/8.. அச்சறுத்திய இலங்கையை போராடி வீழ்த்திய இந்தியா.. தீப்தி தனித்துவ சாதனை

Ind vs sl Women Cwc
- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை செப்டம்பர் 30ஆம் தேதி கௌகாத்தியில் கோலாகலமாக துவங்கியது. உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கும் அத்தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் மந்தனா 8 ரன்னில் அவுட்டானார்.

சிறிது நேரத்திலேயே மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. அதன் பின் மீண்டும் துவங்கிய போட்டி தலா 47 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. அந்த போட்டியைத் தொடர்ந்த இந்திய அணிக்கு மறுபுறம் நிதானமாக விளையாடிய மற்றொரு துவக்க வீராங்கனை பிரதிகா ராவல் 37 (59) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

போராடி அசத்திய இந்தியா:

அவருடன் இணைந்து விளையாடிய ஹர்லின் தியோல் 48 (64) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் அதிரடியாக விளையாட முயற்சித்து 21 (19) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். போதாக்குறைக்கு மிடில் ஆர்டரில் ஜெமிமா ரோட்ரிகஸ் 0, ரிச்சா கோஸ் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 124/6 என இந்தியா தடுமாறியது.

அப்போது ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா மற்றும் அமன்ஜோத் கௌர் ஆகியோர் நங்கூரமாக விளையாடினர். நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி இலங்கையை பந்தாடிய அந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவைக் காப்பாற்றியது. அதில் அமன்ஜோத் அரை சதமடித்து 57 (56) ரன்களில் அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய தீப்தி சர்மா அரை சதமடித்து 53 (53) ரன்கள் அடித்தார்.

- Advertisement -

தீப்தி தனித்துவ சாதனை:

இறுதியில் ஸ்னே ராணா அதிரடியாக 28* (15) ரன்கள் எடுத்த உதவியுடன் 47 ஓவரில் இந்தியா 269/8 ரன்களை குவித்தது. இலங்கைக்கு அதிகபட்சமாக இனோகா ரணவீரா 4, உதேசிக்கா பிரபோதனி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய இலங்கை அணியை சிறப்பாக பந்து வீசிய இந்தியா 45.4 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.

இலங்கைக்கு கேப்டன் சமாரி அட்டப்பட்டு 43, நீலாக்சி டீ சில்வா 35, ஹர்ஷிதா 29 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீராங்கனைகள் பெரிய ரன்களை அடிக்கவில்லை. இந்தியாவுக்கு அதிகபட்சமாக தீப்தி சர்மா 3, ஸ்னே ராணா 2, ஸ்ரீ சரிணி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் டிஎல்எஸ் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா உலகக்கோப்பை தங்களுடைய சொந்த மண்ணில் வெற்றிகரமாகத் துவங்கியுள்ளது.

இதையும் படிங்க: நண்பன் இல்லாத பாகிஸ்தானுக்கு அந்த மரியாதையே போதும்.. இந்திய அணிக்கு சல்யூட்.. மிஸ்ரா பதிலடி

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தீப்தி சர்மா ஆட்டநாயகி விருதை வென்றார். அத்துடன் ஒரு உலகக் கோப்பை போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற தனித்துவ சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Advertisement