ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்று ஆசிய கோப்பை தோல்வியிலிருந்து மீண்டெழுந்து வெற்றிப் பாதைக்கு திரும்பிய இந்தியா அடுத்ததாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியது. உலகக் கோப்பைக்கு முன்பாக பங்கேற்கும் இந்த கடைசி டி20 தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதியன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு திருவனந்தபுரம் மைதானம் மிகப்பெரிய அதிர்ச்சியை வைத்திருந்தது.
ஏனெனில் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் மிரட்டலாக பந்து வீசிய இந்தியா முதல் ஓவரிலேயே கேப்டன் பவுமாவை டக் அவுட் செய்து மற்றொரு தொடக்க வீரர் டீ காக்கை 1 (4) ரன்னில் காலி செய்தது. அதனால் 1/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய ரோசொவ் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரை அர்ஷிதீப் சிங் தனது முதல் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் கோல்டன் டக் அவுட் செய்து மிரட்டினார்.
போதாகுறைக்கு அடுத்து களமிறங்கிய திரிஷ்டன் ஸ்டப்ஸ் கோல்டன் டக் அவுட்டானதால் 9/5 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற தென்னாபிரிக்கா ஆரம்பத்திலேயே திணறியது. அதனால் 50 தாண்டாது என கருதப்பட்ட அந்த அணியின் மானத்தைக் காப்பாற்றிய மார்க்கம் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 25 (24) ரன்களிலும் வேன் பர்ணல் 24 (37) ரன்களிலும் போராடி ஆட்டமிழந்தனர்.
தடுமாறிய இந்தியா:
அதனால் 50 ரன்களை கடந்த அந்த அணிக்கு கடைசி நேரத்தில் தைரியத்தை வெளிப்படுத்திய கேசவராஜ் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 41 (35) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றியதால் தப்பிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் போராடி 106/8 ரன்கள் எடுத்தது. பட்டாசாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக இளம் வீரர் அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளையும் தீபக் சஹர் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதை தொடர்ந்து 107 ரன்களை சுலபமாக துரத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா கோல்டன் டக் அவுட்டாக விராட் கோலி 3 (9) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
அதனால் 17/2 என தடுமாறிய இந்தியாவுக்கு மற்றொரு தொடக்க வீரர் ராகுல் தடவிய நிலையில் மறுபுறம் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அப்படியே நிதானமும் அதிரடியும் கலந்த பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி சரிவை சரி செய்து 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பாதையில் அழைத்து வந்தது.
மிரட்டிய ஸ்கை:
நேரம் செல்ல செல்ல தென் ஆப்பிரிக்க பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 16.4 ஓவரில் 110/2 ரன்களை எடுக்க வைத்து இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. இதில் கடைசி வரை தடவிய ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 51* (56) ரன்கள் எடுக்க மறுபுறம் சுழன்றடித்த சூரியகுமார் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 50* (33) ரன்களை விளாசி சிக்சருடன் பினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார்.
ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தாத வகையில் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்த இப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்று பிட்ச்சை கச்சிதமாக பயன்படுத்திய இந்திய பவுலர்கள் அனலாக பந்து வீசி 9/5 என ஆரம்பத்திலேயே தென் ஆப்பிரிக்காவை சுருட்டிய போதே பாதி வெற்றி உறுதியானது. ஆனால் தொடர் தூங்குவதற்கு முன்பாக இந்தியாவின் புதிய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு எளிதாக வெற்றி பெறுவோம் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா வாயில் பேசியதை அந்த அணி களத்தில் செய்து காட்டவில்லை. அதனால் எவ்வளவோ போராடியும் ஆல் அவுட்டை தவிர்க்க முடிந்த தென்னாப்பிரிக்கா பெரிய ரன்களை எடுக்க தவறியது.
அத்துடன் இந்தியாவின் பந்துவீச்சை பார்த்து அதே மாதிரியான பந்து வீச்சையும் வெளிப்படுத்த தவறிய அந்த அணியின் வெற்றிக்கு கேஎல் ராகுல் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி தடையாக நின்றார். குறைவான இலக்காக இருந்ததை பயன்படுத்தி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் மெதுவாக விளையாடினாலும் மறுபுறம் பட்டையை கிளப்பிய சூர்யகுமார் யாதவ் அற்புதமாக விளையாடி மீண்டுமொரு வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா மீண்டும் தன்னை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது.



