IND vs RSA : சவாலான இலக்கை நிர்ணயித்த தெ.ஆ – எளிதாக துரத்திய இந்திய அணி – வெற்றி பெற்றது எப்படி?

Shreyas Iyer VS RSA
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியது. அந்த நிலைமையில் இத்தொடரை வென்று சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அக்டோபர் 9ஆம் தேதியன்று ராஞ்சியில் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 5 (8) ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற மற்றொரு தொடக்க வீரர் ஜானெமன் மாலன் 25 (31) ரன்களில் நடையை கட்டினார்.

அதனால் 40/2 என்ற தடுமாற்றமான தொடக்கதை பெற்ற அந்த அணிக்கு 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரீசா ஹென்ரிக்ஸ் – ஐடன் மார்க்ரம் ஆகியோர் நங்கூரமாக நின்று இந்தியாவுக்கு சவாலை கொடுத்தனர். 10வது ஓவரில் இணைந்த இவர்கள் 32 ஓவர்கள் வரை சிம்ம சொப்பனமாக நின்று 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுப்படுத்திய போது ஹென்ரிக்ஸ் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 74 (76) ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் போராடிய ஐடன் மார்க்ரம் தனது பங்கிற்கு 7 பவுண்டரி 1 சிக்சருடன் 79 (89) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

அசத்திய இந்தியா:
அதை பயன்படுத்திய இந்திய பவுலர்கள் அடுத்து வந்த க்ளாஸென் 30 (26) டேவிட் மில்லர் 35* (34) வேன் பர்ணல் 16 (22) கேசவ் மகாராஜ் 5 (13) என முக்கிய வீரர்களை பெரிய ரன்கள் எடுக்க விடாமல் கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசினர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 278/7 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 279 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் ஷிகர் தவான் 13 (20) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களிலேயே சுப்மன் கில் 28 (26) ரன்களில் நடையை கட்டினார்.

அதனால் 48/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கி ஜோடி சேர்ந்த இஷான் கிசான் – ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவை போலவே நங்கூரமாகவும் நிதானமாகவும் பேட்டிங் செய்தனர். 9வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் தென்னாப்பிரிக்கா பயன்படுத்திய அதே டெக்னிக்கை பின்பற்றி அவர்களையும் மிஞ்சும் வகையில் 35வது ஓவர்கள் வரை விக்கெட்டை விடாமல் சிம்ம சொப்பனமாக ரன்களை குவித்தனர்.

- Advertisement -

அசத்திய ஷ்ரேயஸ்:
நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த போது 4 பவுண்டரி 7 சிக்சருடன் அதிரடியாக விளையாடிய இஷான் கிசான் 93 (84) ரன்கள் எடுத்திருந்தபோது சதமடிக்கும் நோக்கத்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி ஏமாற்றத்துடன் திரும்பினார். இருப்பினும் மறுபுறம் அந்த தவறை செய்யாமல் அட்டகாசமாக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 15 பவுண்டரியுடன் சதமடித்து 113* (111) ரன்கள் விளாசி அவுட்டாகாமல் வெற்றி பெற வைத்தார்.

அவருடன் சஞ்சு சாம்சன் 30* (36) ரன்கள் எடுத்ததால் 45.5 ஓவரிலேயே 282/3 ரன்களை எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இந்தியா சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் சாய்ந்து விடமாட்டோம் என்று தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா மார்க்ரம் – ஹென்றிக்ஸ் ஆகியோரது பார்ட்னர்ஷிப் காரணமாக 300 ரன்களை தொடுவதற்கு அற்புதமான அடித்தளத்தை பெற்றது.

ஆனால் அவர்களை அவுட்டாக்கிய இந்திய பவுலர்கள் தென் ஆப்பிரிக்காவை 300 ரன்களை எட்ட விடாமல் தடுத்தது பாதி வெற்றியை உறுதி செய்தது. அதை தொடர்ந்து பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் மீண்டும் ஏமாற்றினாலும் தென் ஆப்பிரிக்காவை போலவே 3வது விக்கெட்டுக்கு எளிதில் விக்கெட்டை விடாமல் நிதானமாக பேட்டிங் செய்த ஷ்ரேயஸ் – இஷான் ஜோடி ஒரு கட்டத்துக்கு பின் தென்னாப்பிரிக்க ஜோடியை விட அதிரடியாக ரன்களை சேர்த்ததால் ரன்ரேட் கட்டுக்குள்ளேயே இருந்தது.

அந்த பார்ட்னர்ஷிப்பை முன்கூட்டியே உடைக்க தவறிய தென் ஆப்பிரிக்காவை விளாசிய இந்த ஜோடியில் ஸ்ரேயாஸ் அய்யர் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். மேலும் முதல் போட்டியில் சேசிங் செய்வது கடினமாக அமைந்ததை கருத்தில் கொண்டு இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்காவின் செய்த முடிவு சரியாக இருந்தாலும் 300 ரன்களை எடுக்காமல் விட்டது தோல்வியை கொடுத்தது. அந்த தவறு இந்தியாவிற்கு வெற்றியை கொடுத்தது.

Advertisement