ஹாங்காங் நாட்டில் பிரபல உள்ளூர் தொடரான ஹாங்காங் சிக்ஸ் 2025 கிரிக்கெட் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. வெறும் 6 ஓவர்களை மட்டுமே கொண்ட அத்தொடரில் வழக்கத்திற்கு மாறான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது வழக்கமாகும். அத்தொடரில் நவம்பர் 7ஆம் தேதி மோங் காக் நகரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது.
இந்திய நேரப்படி மதியம் 1.05 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடினார். 2.3 ஓவரில் 41 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த அவர் 2 பௌண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு 28 (11) ரன்களை 254.55 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானர்.
கார்த்திக் தலைமையில்:
அவருடன் இணைந்து தமது பங்கிற்கு பாகிஸ்தானை பந்தாடிய மற்றொரு துவக்க வீரர் பரத் சிப்பிலி 2 பௌண்டரி 2 சிக்சருடன் 24 (13) ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்டுவர்ட் பின்னி பவுண்டரியை அடித்து 4 (2) ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் கேப்டன் மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 17*(6) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.
கூடவே அபிமன்யு மிதுன் 6 (5) ரன்கள் எடுத்ததால் 6 ஓவரில் இந்தியா 86/4 ரன்களை அடித்து அசத்தியது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக முகமது செசாத் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய பாகிஸ்தானுக்கு அதிரடி காட்ட முயற்சித்த மாஸ் சாடாக்ட் 7 (3) ரன்னில் ஸ்டூவர்ட் பின்னி வேகத்தில் அவுட்டானார்.
இந்தியா வெற்றி:
அதோடு நிற்காத பின்னி அடுத்த 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுத்து அபாரமாக பந்து வீசினார். இருப்பினும் மறுபுறம் அதிரடி காட்டிய கவாஜா ஃநபை 18* (9) ரன்கள் எடுத்தார். அவருடன் அப்துல் சமத் 16* (6) ரன்கள் எடுத்த போது மழை வந்தது. அப்போது பாகிஸ்தான் 3 ஓவரில் 41/1 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்தது.
இதையும் படிங்க: மேக்ஸ்வெல் வந்தாலே இது கன்பார்ம்.. வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சு குறித்து – சீக்கா ஸ்ரீகாந்த் பாராட்டு
அதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க வழக்கம் போல டிஎல்எஸ் விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. அப்போது 3 ஓவரின் முடிவில் இந்தியாவை விட பாகிஸ்தான் 2 ரன்கள் குறைவாக எடுத்திருந்தது. அதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன் காரணமாக தினேஷ் கார்த்திக் தலைமையில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா அடுத்தப் போட்டியில் நாளை குவைத்தை எதிர்கொள்கிறது.



