நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் இந்தியா முதல் முறையாக வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஜனவரி 21ஆம் தேதி துவங்கியது. நாக்பூரில் இரவு 7 மணிக்கு துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 238/7 ரன்களை குவித்து அசத்தியது. இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் 10, இஷான் கிசான் 8, சிவம் துபே 9 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் அபிஷேக் சர்மா நியூசிலாந்தை வெளுத்து வாங்கி 84 (35) ரன்கள் குவித்து மிரட்டினார்.
இந்தியா அசத்தல்:
அதே போல மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா 25 (16) ரன்கள் எடுக்க கடைசியில் ரிங்கு சிங் 44* (16) ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக்கப் டுபி, கெய்ல் ஜெமிசன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய நியூஸிலாந்துக்கு அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே டேவோன் கான்வே டக் அவுட்டானார்.
அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 1 (5) ரன்னில் ஹர்திக் பாண்டியா வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதனால் 1/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய நியூசிலாந்துக்கு மற்றொரு துவக்க வீரர் டிம் ராபின்சன் 21 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். இருப்பினும் 4வது இடத்தில் களமிறங்கிய கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
இந்தியா வெற்றி:
அவருடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய மார்க் சேப்மேன் அதிரடியாக விளையாட முயற்சித்து 39 (14) ரன்னில் வருண் சக்கரவர்த்தி சுழலில் அவுட்டானார். மறுபுறம் அரை சதமடித்து இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்த கிளன் பிலிப்ஸ் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 78 (40) ரன்கள் எடுத்த போது அக்சர் பட்டேல் சுழலில் சிக்கினார். இறுதியில் டார்ல் மிட்சேல் 28 (18), கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 20* (13) ரன்களை எடுத்தும் 20 ஓவரில் நியூசிலாந்து 190/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையும் படிங்க: இந்தியா மேல் வங்கதேசம் சொல்லும் குற்றம் உண்மையில்லை.. அனுமதியை மறுத்த ஐசிசி அதிரடி அறிவிப்பு
அதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் நாக்பூர் மைதானத்தில் முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் 2016ஆம் ஆண்டில் இங்கு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோற்றது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.



