IND vs ENG : சரியான பலத்துடன் ரோஹித்தின் அருமையான யோசனையில் கிடைத்த மாபெரும் வெற்றி – என்ன நடந்தது?

IND vs ENG Rohit Sharma
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12ஆம் தேதி லண்டனில் துவங்கியது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 378 ரன்களை சேசிங் செய்து 2 – 2 என தொடரை சமன் செய்த இங்கிலாந்துக்கு பின்னர் நடந்த டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்று பதிலடி கொடுத்து பழி தீர்த்தது. அந்த நிலைமையில் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் விராட் கோலி காயத்தால் விலகிய நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பத்திலேயே அனலாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஜேசன் ராயை டக் அவுட் செய்து அடுத்ததாக களமிறங்கிய ஜோ ரூட்டை சில்வர் டக் அவுட் செய்து மிரட்டினார். அப்போது களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் முகமது ஷமியின் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 7/3 என மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு ஜானி பேர்ஸ்டோ 7 (20) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்த ஓவரிலேயே லியம் லிவிங்ஸ்டன் டக் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

சுருண்ட இங்கிலாந்து:
அதனால் 26/5 என படுமோசமான தொடக்கத்தை பெற்ற இங்கிலாந்து தனது குறைந்தபட்ச ஸ்கோரான 86 ரன்களை தாண்டுமா என்ற கவலை அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஏனெனில் அந்த இக்கட்டான நிலைமையில் நங்கூரத்தை போட முயன்ற மொயீன் அலி 14 (18) ரன்களிலும் கேப்டன் ஜோஸ் பட்லர் 6 பவுண்டரியுடன் 30 (32) ரன்களிலும் போராடி இந்தியாவின் தரமான பந்துவீச்சில் அவுட்டானார்கள்.

அதனால் 59/7 என மேலும் சரிந்த இங்கிலாந்தின் தோல்வியும் அதோடு உறுதியான நிலைமையில் ஓவர்டன் 8 (7) ரன்களும் கார்ஸ் 15 (26) ரன்கள் எடுத்ததால் 86 ரன்களை கடந்த அந்த அணி கடைசியில் டேவிட் வில்லி 21 (26) ரன்களை எடுத்து காப்பாற்றியதால் 100 ரன்களை கடந்தது. ஆனாலும் 25.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 110 ரன்களில் சுருண்டு ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மிகப் பெரும் அவமானத்தைச் சந்தித்தது.

- Advertisement -

இந்தியா மாஸ்:
அந்த அளவுக்கு அனலாக பந்துவீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். அவருக்கு உறுதுணையாக அட்டகாசமாக பந்துவீசிய முகமது சமி தனது பங்கிற்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 111 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பிய ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

இதில் ஒருபுறம் ஷிகர் தவான் பொறுமையாக பேட்டிங் செய்ய மறுபுறம் அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்ட ரோகித் சர்மா அரைசதம் அடித்து 7 பவுண்டரி 5 சிக்சருடன் 76* (58) ரன்கள் குவித்து அபார பினிஷிங் கொடுத்தார். அவருடன் நங்கூரமாக பேட்டிங் செய்த தவான் 4 பவுண்டரியுடன் கடைசி வரை அவுட்டாகாமல் 31* (54) ரன்கள் எடுத்ததால் 18.4 ஓவரிலேயே 114/0 ரன்களை எடுத்த இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ரோஹித்தின் திட்டம்:
முன்னதாக இப்போட்டி நடைபெற்ற லண்டன் ஓவல் மைதானத்தில் இன்றைய நாளில் நல்ல மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவியதை உணர்ந்த ரோகித் சர்மா இந்தியாவின் ஃபாஸ்ட் பவுலர்களால் இந்த கால சூழ்நிலையை பயன்படுத்த முடியும் என்ற பலத்தை உபயோகப்படுத்தும் வகையில் டாஸ் வென்றதும் உடனடியாக பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்பின் துவங்கிய போட்டியில் அவரின் வாக்கை காப்பாற்றும் வகையில் ஈரப்பதமான கால சூழ்நிலையை பயன்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோர் பந்தை அற்புதமாக ஸ்விங் செய்து ஜேசன் ராய், லிவிங்ஸ்டன், ஸ்டோக்ஸ், ரூட் உட்பட இங்கிலாந்தின் 5 முதுகெலும்பு பேட்ஸ்மேன்களை பவர்பிளே ஓவர்களில் காலி செய்து ஆரம்பத்திலேயே இந்தியாவின் கையை ஓங்க வைத்தனர். மேலும் பட்லர், மொயின் அலி ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் நங்கூரத்தை போட விடாமல் அவுட் செய்த இந்தியா பந்துவீச்சிலேயே பாதி கதையை முடித்தது.

அப்படி பந்து வீச்சாளர்கள் எரிமலையாக செயல்பட்டதை பார்த்து உற்சாகமடைந்த ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய பழைய பன்னீர்செல்வம் பார்ட்னர்ஷிப் ஜோடி நீண்ட நாட்களுக்குப்பின் இப்போட்டியில் இணைந்து பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக ரன்களை சேர்த்து இந்தியாவுக்கு விக்கெட் இழப்பின்றி மெகா வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இங்கிலாந்து போன்ற சொந்த மண்ணில் வலுவான அணியை ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியா போன்ற ஒரு அணி இப்படி பந்துவீச்சில் மண்ணை கவ்வ வைத்து பேட்டிங்கில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது உண்மையாகவே மிகப்பெரிய பாராட்டுக்குரிய அம்சமாகும்.

Advertisement