
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி ஜனவரி 25ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு பில் சால்ட் 4, பென் டக்கெட் 3 ரன்களில் அர்ஷ்தீப், சுந்தர் பந்து வீச்சில் திரும்பினார்கள். அடுத்ததாக வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் ஹரி ப்ரூக் 13 ரன்களில் வருண் சக்கரவர்த்தி சுழலில் போல்டானார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய பட்லரும் 45 (30) ரன்கள் எடுத்து அவுட்டாகி சென்றார்.
அடுத்ததாக வந்த லிவிங்ஸ்டன் 13, ஜேமி ஓவர்டன் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இறுதியில் பிரைடன் கார்ஸ் 31, ஆர்ச்சர் 12*, அடில் ரசித் 10, மார்க் வுட் 5* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இங்கிலாந்து 165 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக அக்சர் படேல் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக 166 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சஞ்சு சாம்சன் 5, அபிஷேக் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.
அடுத்ததாக வந்த திலக் வர்மா அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் சூரியகுமார் யாதவ் 12, துருவ் ஜுரேல் 4, ஹர்டிக் பாண்டியா 7 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்கள். அதனால் திலக் வர்மா நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அடுத்ததாக வந்த வாசிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி 26 (19) ரன்களில் அவுட்டானார்.
ஆனால் அதற்கடுத்ததாக வந்த அக்சர் படேல் 2, அர்ஷ்தீப் சிங் 6 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய திலக் வர்மா அரை சதமடித்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். அவருடன் கடைசி நேரத்தில் களமிறங்கிய ரவி பிஸ்னோய் 2 சிக்ஸர்களுடன் 9* (5) விளாசி போட்டியில் திருப்புமுனை உண்டாக்கினார். அதை பயன்படுத்திய திலக் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 72* (55) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்.
அதனால் 19.2 ஓவரில் 166-8 ரன்கள் எடுத்த இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலையை அதிகரித்துள்ளது. பிரைடன் கார்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தும் இங்கிலாந்துக்கு தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இதையும் சேர்த்து கடைசி 4 போட்டிகளில் திலக் 107*, 120*, 19*, 72* என அவுட்டே ஆகாமல் 318* ரன்கள் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 9 ரன்ஸ்.. 19 விக்கெட்ஸ்.. விரித்த வலையில் பாகிஸ்தானை விழ வைத்து மாஸ் காட்டிய வெ.இ.. 38 வருட சாதனை ஆட்டம்
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 அவுட்டுக்கு மத்தியில் அவுட்டே ஆகாமல் 300 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் நியூசிலாந்தின் மார்க் சேப்மேன் 271 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.