- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐசிசி அண்டர்19 உ.கோ: 124/3 டூ 146க்கு அவுட்.. மழைக்கு பின் மேஜிக் செய்து.. வங்கதேசத்தை ஊதித்தள்ளிய இந்தியா

ஐசிசி 2026 அண்டர்-19 உலகக் கோப்பை நமீபியா மற்றும் ஜிம்பாவேவில் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் தங்களது முதல் போட்டியில் அமெரிக்காவை தோற்கடித்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்தப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. அப்போட்டி ஜனவரி 17ஆம் தேதி ஜிம்பாப்வே நாட்டில் உள்ள புலவாயோ நகரில் இந்திய நேரப்படி மதியம் 1:00 மணிக்கு துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஒருபுறம் வைபவ் சூர்யவன்சி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் மறுபுறம் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 6, வேதாந்தா திரிவேதி 0, விகான் மல்கோத்ரா 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 53/3 என இந்தியா தடுமாறியது.

- Advertisement -

மழைக்கு பின் மேஜிக்:

அப்போது களமிறங்கிய அபிஞான் குண்டு பொறுப்புடன் விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் இணைந்த சூரியவன்சி அரை சதமடித்து 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 72 (67) ரன்களை குவித்து அவுட்டானார். அடுத்து வந்த ஹர்வன்ஸ் பங்காலியா 2 ரன்னில் அவுட்டானாலும் கனிஷ்க் சௌஹான் முக்கியமான 28 (26) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

மறுபுறம் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குண்டு அரை சதமடித்து அதிகபட்சமாக 80 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியில் கிளன் பட்டேல் 8, ஹெனில் பட்டேல் 7, தீபேஷ் 11, அம்ப்ரிஸ் 5 ரன்கள் எடுத்த உதவியுடன் 48.4 ஓவரில் இந்திய அண்டர்-19 அணி 238 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக அல் பகத் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

அடுத்து விளையாடிய வங்கதேச அணிக்கு ஜவாத் அப்ரார் 5 ரன்களில் தீபேஸ் வேகத்தில் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த கேப்டன் ஹக்கீம் தமீம் நிதானமாக விளையாடினார். அவருடன் இணைந்து மறுபுறம் நிதானத்தைக் காட்டிய ரிபாத் பெக் 37 ரன்கள் குவித்து அவுட்டானார். அப்போது வந்த மழை போட்டியை தாமதப்படுத்தியதால் வங்கதேசம் வெற்றி பெற 29 ஓவரில் 165 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்து வந்த கலாம் சித்திக் 15 ரன்னில் அவுட்டான போதிலும் எதிர்ப்புறம் அசத்திய கேப்டன் தமீம் அரை சதமடித்ததால் வங்கதேசம் 124/3 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அப்போது மாயாஜால பந்து வீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி அடுத்து வந்த ஜிபோனை 7 ரன்னில் காலி செய்து மறுபுறம் சவாலைக் கொடுத்த கேப்டன் தமீமை 51 ரன்னில் பெவிலியன் அனுப்பியது. அத்துடன் ரிசான் ஹுசைன் 15, பஷீர் ரத்துல் 2, பரித் ஹசன் 0 என அடுத்து வந்த வீரர்களையும் இந்திய பவுலர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக்கினர்.

இதையும் படிங்க: ஏற்கனவே சாதிச்ச எனக்கு வாய்ப்பில்லை.. பரவால்ல இந்திய அணிக்கு ஜெய்க்க வாழ்த்துக்கள்.. சிராஜ் பேட்டி

இறுதியில் 28.3 ஓவரில் 146 ரன்களுக்கு வங்கதேசத்தை ஆல் அவுட்டாக்கிய இந்திய அண்டர்-19 அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் விதிமுறைப்படி வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக விஹான் மல்கோத்ரா 4, கிளன் பட்டேல் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். இதனால் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றுள்ள இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

- Advertisement -