ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்று முன்னிலை வகிக்கிறது. அடுத்ததாக இரண்டாவது போட்டி பகல் இரவாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெறுகிறது. அதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி நவம்பர் 30ஆம் தேதி கான்பெரா நகரில் துவங்கியது.
ஆனால் மழையால் தாமதமான அந்தப் போட்டி இருதரப்புக்கும் 46 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் போராடி 240 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் சாம் கோன்ஸ்டஸ் சதத்தை அடித்து 107, ஹன்னோ ஜேகப்ஸ் 61 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா அசத்தல்:
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்தார்கள். முதல் போட்டியிலேயே 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அந்த ஜோடி இந்தப் போட்டியிலும் 75 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தது.
அதில் ஜெய்ஸ்வால் 45 ரன்கள் எடுத்த நிலையில் கேஎல் ராகுல் 27* ரன்கள் குவித்து அவுட்டாகாமல் அடுத்தவருக்கு வழி விட்டார். ஆனால் அவர்களுக்கு ஓப்பனிங் இடத்தை கொடுத்த ரோகித் சர்மா 4வது இடத்தில் களமிறங்கி 3 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மூன்றாவது இடத்தில் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய சுப்மன் கில் சிறப்பாக பேட்டிங் செய்தார்.
இந்தியா வெற்றி:
அவருடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் நித்திஷ் ரெட்டி 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தலாக விளையாடி 42 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அசத்தலாக விளையாடிய கில் அரை சதமடித்து 50* ரன்கள் குவித்து அடுத்த வீரருக்கு வழி விட்டார். அடுத்ததாக ரவீந்திர ஜடேஜா 27, சர்பராஸ் கான் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
இதையும் படிங்க: இந்திய அணிக்காக சுயநலமற்ற முடிவை எடுத்த ரோஹித்.. புதிய கீப்பர் சர்பராஸை முதுகில் அடித்த காரணம்
ஆனால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 5 பவுண்டரியுடன் 42* (36) ரன்கள் குவித்தார். அதனால் 46 ஓவரில் 257-5 ரன்கள் குவித்த இந்திய அணி ஆஸ்திரேலிய பிரதமர் அணியை விட 17 ரன்கள் முன்னிலை பெற்று இப்போட்டியில் 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு சார்லி ஆண்டர்சன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் அடிலெய்ட் நகரில் நடைபெற உள்ள 2வது போட்டிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா காண்பித்துள்ளது.



