IND vs AUS : கடைசி வரை நின்ற ரோஹித். இரண்டே பந்துகளில் முடித்து கொடுத்த தினேஷ் கார்த்திக் – வெற்றி பெற்றது எப்படி?

Rohit Sharma IND vs AUS
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியது. அதனால் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரின் கோப்பையை வென்று சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் 2வது போட்டியில் இந்தியா களமிறங்கியது. செப்டம்பர் 23ஆம் தேதியன்று நாக்பூரில் இரவு 7 மணிக்கு துவங்க வேண்டிய அந்த போட்டி மாலை நேரத்தில் பெய்த மழையால் மைதானம் ஈரமாக இருந்த காரணத்தால் இரவு 9.30 மணிக்கு தாமதமாக துவங்கியது.

அப்படி இரண்டரை மணி நேரம் தாமதமாக துவங்கியதால் தலா 12 ஓவர்கள் குறைக்கப்பட்டு வெறும் 8 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மேலும் இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு பதில் பும்ராவும் புவனேஷ்வர் குமாருக்கு பதில் ரிஷப் பண்டும் சேர்க்கப்பட்டனர். அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கடந்த போட்டியில் மிரட்டிய கேமரூன் க்ரீன் 5 (4) ரன்களில் ரன் அவுட்டாக அடுத்து களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் அக்ஷர் பட்டேலிடம் கோல்டன் டக் அவுட்டானார்.

- Advertisement -

மிரட்டிய ஜாம்பா:
அந்த சமயத்தில் களமிறங்கிய டிம் டேவிட் 2 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மறுபுறம் அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (15) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனால் 46/4 என தடுமாறிய தங்களது அணியை அடுத்ததாக களமிறங்கிய மேத்யூ வேட் சரவெடியாக பேட்டிங் செய்து 4 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்கவிட்டு 43* (20) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் ஸ்மித் 8 (5) ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் ஆஸ்திரேலியா 90/5 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 91 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முதல் ஓவரிலிருந்தே கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட மறுபுறம் தடவிய ராகுல் 1 சிக்சருடன் 10 (6) ரன்களில் ஆடம் ஜாம்பாவிடம் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய விராட் கோலி தனது பங்கிற்கு 2 பவுண்டரியுடன் 11 (6) ரன்கள் எடுத்திருந்த போது ஆடம் ஜாம்பா அவரை கிளீன் போல்ட்டாக்கினார். அடுத்த பந்திலேயே அடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவும் அவரிடமே கோல்டன் டக் அவுட்டாகி இந்தியாவுக்கு மாபெரும் அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

அசத்திய ஹிட்மேன்:
அதனால் 55/3 என பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு ஜாம்பாவின் ஹாட்ரிக் பந்தை அடுத்ததாக களமிறங்கி தடுத்து நிறுத்திய ஹர்திக் பாண்டியா 1 பவுண்டரியுடன் 9 (9) ரன்களில் அவுட்டானது மேலும் பின்னடைவை கொடுத்தது. ஆனால் மறுபுறம் நான் இருக்கிறேன் என்ற வகையில் பொறுப்புடன் பேட்டிங் செய்த ரோகித் சர்மா அதிரடியாக ரன்களை குவித்ததால் வெற்றி நெருங்கிய இந்தியாவுக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது டேனியல் சாம்ஸ் வீசிய கடைசி ஓவரில் களமிறங்கிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் முதலிரண்டு பந்துகளில் சிக்ஸரையும் பவுண்டரியும் பறக்கவிட்டு 10* (2) ரன்களை விளாசி சூப்பர் பினிசிங் கொடுக்க மறுபுறம் நங்கூரமாக நின்ற கேப்டன் ரோகித் சர்மா 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46* (20) ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

அதனால் 7.2 ஓவரிலேயே 72/4 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா வாழ்வா – சாவா என்ற இப்போட்டியில் வாழ்வைக் கண்டு 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் சாய்ந்து விடமாட்டோம் என ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. மழையின் தாமதத்தால் 8 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்ததால் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது என்று கூற வேண்டும். ஏனெனில் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா திரும்பியும் மீண்டும் அக்சர் பட்டேல் தவிர்த்து எஞ்சிய அனைவரும் 10க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கினர்.

மேலும் ஓவருக்கு 11 ரன்களை சேசிங் செய்யும் போது லெக் பிரேக் பவுலரான ஆடம் ஜாம்பாவிடம் ஏற்கனவே தடுமாறக்கூடிய விராட் கோலி மீண்டும் தடுமாறியதை போல் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் அவுட்டானார்கள். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் ரோகித் சர்மா காப்பாற்றிய இந்தியாவுக்கு இறுதியில் தினேஷ் கார்த்திக் சூப்பர் பினிசிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ரோஹித் ஆட்டநாயனகனாக அறிவிக்கப்பட்டார். இதனால் சமனடைந்துள்ள விறுவிறுப்பான இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Advertisement