IND vs AUS : அடித்து கொடுத்த சூரியகுமார் மற்றும் கோலி. முடித்துக்கொடுத்த ஹார்டிக் பாண்டியா – வெற்றி கிட்டியது எப்படி?

Virat Kohli Suryakumar Yadav
- Advertisement -

ஆசிய கோப்பை தோல்வியை தொடர்ந்து உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோற்ற இந்தியா 8 ஓவர்களாக நடைபெற்ற 2வது போட்டியில் அதிரடியான வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டி செப்டம்பர் 25-ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் இரவு 7 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் ஆரோன் பின்ச் 7 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் தொடக்க வீரர் கேமரூன் இந்திய பவுலர்களை சரமாரியாக அடித்து 7 பவுண்டரி 3 சிக்சருடன் 52 (21) ரன்களை 248.62 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஆட்டமிழந்தார்.

அதனால் 5 ஓவரில் 52/2 என்ற அதிரடி தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் ஸ்டீவ் ஸ்மித் 9 (10) கிளன் மேக்ஸ்வெல் 6 (11) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த ஓவர்களிள் சொற்ப ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஜோஸ் இங்லீஷ் 24 (22) ரன்களில் நடையை கட்டினார். போதாகுறைக்கு மேத்தியூ வேட் 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றியதால் 117/6 என மிடில் ஓவர்களில் பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய இளம் வீரர் டிம் டேவிட் 2 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்கவிட்டு அதிரடியான 54 (27) ரன்கள் அரை சதத்தை விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அசத்திய ஸ்கை:
அவருடன் 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேனியல் சாம்ஸ் தனது பங்கிற்கு 1 பவுண்டரி 2 சிக்சருடன் 28* (20) ரன்கள் விளாசி ஃபினிசிங் கொடுத்தால் 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 186/7 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 187 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முதல் ஓவரிலேயே கேஎல் ராகுல் 1 (1) ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்த சில ஓவர்களில் கேப்டன் ரோகித் சர்மாவும் 17 (14) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

அதனால் 30/2 என தடுமாற்ற தொடக்கத்தை பெற்ற இந்தியாவை அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி – சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் நேரம் செல்ல செல்ல மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் அதிரடியான அரை சதம் விளாசினார். 4வது ஓவரில் சேர்ந்து 14வது ஓவர் வரை அட்டகாசமாக செயல்பட்ட அவர் விராட் கோலியுடன் 3வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த போது 5 பவுண்டரி 5 சிக்சருடன் 69 (36) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

நிதானமான விராட்:
அவருக்கு பின் மறுபுறம் ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடிய விராட் கோலி தனது பங்கிற்கு ஆஸ்திரேலியாவை சிறப்பாக எதிர்கொண்டு அரைசதம் அடித்து வெற்றியை உறுதி செய்து 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 63 (48) ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் அவர்களது போராட்டத்தை வீணடிக்காத வகையில் 2 பவுண்டரி 1 சிக்ஸரை பறக்க விட்ட ஹர்திக் பாண்டியா 25* (16) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

அதனால் 19.5 ஓவரில் 187/4 ரன்களை கச்சிதமாக எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா முதல் போட்டியில் தோற்ற பின் கொதித்தெழுந்து அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் டாஸ் தோற்றாலும் பேட்டிங்கில் அதிரடியான தொடக்கத்தைப் பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு மிடில் ஓவரில் கிளன் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் இந்தியாவின் தரமான சுழல் பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் கடைசியில் 200 ரன்களை தொட முடியாமல் 10 – 15 ரன்களை குறைவாக எடுத்தது பின்னடைவை ஏற்படுத்தியது.

மறுபுறம் பந்து வீச்சில் மிடில் மற்றும் கடைசி ஓவர்களில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட இந்தியாவுக்கு பேட்டிங்கில் ராகுல் – ரோஹித் ஆகியோர் ஏமாற்றியதால் நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை என்றாலும் சூரியகுமாரின் அதிரடியும் விராட் கோலி நிதான ஆட்டமும் ரன் ரேட்டை எகிற விடாமல் கட்டுக்குள் வைத்து இறுதியில் பாண்டியாவின் ஃபினிசிங் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

இந்த வெற்றியால் சொந்த மண்ணில் எப்போதுமே நாங்கள் ராஜா என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களை மீண்டும் உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபித்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை முத்தமிட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

Advertisement