
ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியுள்ள 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய சூழ்நிலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்வதற்காக முன்னதாகவே பயணித்து மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்று தலா 1 வெற்றி தோல்வியை பதிவு செய்த இந்தியா அக்டோபர் 17ஆம் தேதியன்று ஐசிசி நடத்தும் பயிற்சி போட்டிகளில் தன்னுடய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. புகழ்பெற்ற காபா மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் கேஎல் ராகுல் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (33) ரன்களை விளாசி ஆட்டமிழக்க மறுபுறம் தடுமாறிய கேப்டன் ரோகித் சர்மா அடுத்த ஓவரிலேயே 15 (14) ரன்களில் அவுட்டானார். அப்போது களமிறங்கி அதிரடி காட்ட முயன்ற விராட் கோலி 19 (13) ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 2 (5) ரன்களிலும் அவுட்டாகி நடையை கட்டினர். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் தனது பங்கிற்கு 1 பவுண்டரி 1 சிக்சருடன் 20 (14) ரன்களில் ஆட்டமிழந்தார்.
த்ரில் வெற்றி:
ஆனாலும் 4வது இடத்தில் களமிறங்கி அசத்திய நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து போராடி கடைசி ஓவரில் 50 (33) ரன்களில் அவுட்டானர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 186/7 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 187 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் பின்ச் உடன் இணைந்து 64 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த மிட்செல் மார்ஷ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (18) ரன்களில் அவுட்டானார்.
அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் தடுமாறி 11 (12) ரன்களில் அவுட்டான நிலையில் அவரை தொடர்ந்து வந்த கிளன் மேக்ஸ்வெல் சுமாரான பார்மில் இருந்தாலும் பின்ச் உடன் 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 4 பவுண்டரியுடன் 23 (16) ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 7 (7) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக செயல்பட்ட கேப்டன் ஆரோன் பின்ச் 7 பவுண்டரி 3 சிக்சருடன் அபாரமாக பேட்டிங் செய்ததால் வெற்றியை நெருங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கடைசி 2 ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது 19வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் முதல் பந்திலேயே அச்சுறுத்தலை கொடுத்த பின்ச்சை 79 (54) ரன்களில் காலி செய்தார். அடுத்த பந்திலேயே அதிரடி காட்ட முயன்ற டிம் டேவிட்டை 5 (2) ரன்களில் விராட் கோலி ராக்கெட் வேகத்தில் ரன் அவுட் செய்து அனுப்பி வைத்தார். அந்த வகையில் அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டும் கொடுத்த ஹர்ஷல் படேல் சிறப்பாக வீசியதால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆச்சர்யப்படும் வகையில் முதல் முறையாக அப்போட்டியில் முகமது ஷமி பந்து வீசினார்.
அதில் முதலிரண்டு பந்துகளில் தலா 2 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் 3வது பந்தில் பட் கம்மின்ஸை 7 (6) ரன்களில் அவுட் செய்தார். அப்போது களமிறங்கிய ஆஷ்டன் அகர் ரன் அவுட்டான நிலையில் அடுத்த பந்தில் ஜோஸ் இங்கிலீஷ் கிளீன் போல்டானார். கடைசி பந்தில் ரிச்சர்ட்சனையும் அவுட்டாக்கிய முகமது சமி ஒரே ஓவரில் 4 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்கள் எடுத்தார். அதனால் 20 ஓவரில் ஆஸ்திரேலியாவை 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து அதிரடி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் கேஎல் ராகுல் அபார தொடக்கம் கொடுத்த போதிலும் மிடில் ஆர்டரில் சூரியகுமார் தவிர எஞ்சிய வீரர்கள் தடுமாறியதால் 200 ரன்களை எடுக்க தவறிய இந்தியா பந்து வீச்சில் ஆரம்பத்தில் ரன்களை வழங்கினாலும் கடைசி நேரத்தில் அபாரமாக செயல்பட்டது. குறிப்பாக கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 9 ரன்கள் மட்டும் கொடுத்து சாய்த்த இந்தியா சமீப காலங்களில் டெத் ஓவர்களில் காட்டிய தடுமாற்றத்தில் இன்று நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதிலும் கேப்டன் ஆரோன் பின்ச்சை 19வது ஓவரில் சாய்த்த ஹர்ஷல் படேல் மற்றும் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் எடுத்த முகமது சமி ஆகியோர் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.