பெங்களூருவில் நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறவும் இந்தியா தோல்வியை தவிர்க்கவும் போராடி வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதி மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 46க்கு ஆல் அவுட்டானது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்து அசத்தியது. அதைத் தொடர்ந்து 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா பொறுப்புடன் விளையாடியது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா 52, ஜெய்ஸ்வால் 35, விராட் கோலி 70, ரிஷப் பண்ட் 99, சர்பராஸ் கான் 150 ரன்கள் குவித்து இந்தியாவை மீட்டெடுத்தார்கள். ஆனால் லோயர் ஆர்டரில் ராகுல், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பெரிய ரன்கள் எடுக்கவில்லை.
36 வருட கனவு:
அதனால் இந்தியாவை 462 ரன்களுக்கு கட்டுப்படுத்திய நியூஸிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி, வில்லியம் ஓரோர்கே தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியில் 107 ரன்களை மட்டுமே துரத்தும் நியூசிலாந்து நான்காவது நாள் முடிவில் 0-0 என்ற நிலையில் உள்ளது. எனவே ஐந்தாவது நாளில் 107 ரன்களை எடுத்து நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கே பிரகாச வாய்ப்புள்ளது.
ஒருவேளை இப்போட்டியில் வென்றால் 36 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று நியூசிலாந்து சாதனை படைக்கும். கடைசியாக 1988ஆம் ஆண்டு ஜான் ரைட் தலைமையிலான நியூசிலாந்து அணி முகமது அசாருதீன் தலைமையிலான இந்தியாவை மும்பையில் 136 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதன் பின் 36 வருடங்களாக இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டும் என்ற கனவை இப்போட்டியில் நிஜமாக்க நியூஸிலாந்து போராடவுள்ளது.
20 வருட மேஜிக்:
மறுபுறம் 2004ஆம் ஆண்டு அதே மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது போட்டியில் இந்தியா கடைசி இன்னிங்க்ஸில் இதே போல 107 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அப்போது தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு ஹர்பஜன் 5, தமிழக வீரர் முரளி கார்த்திக் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் ஆஸ்திரேலியாவை 93 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: இனிமேலும் ராகுல் தேவையா? ரசிகர்கள் விளாசல்.. அம்பயருடன் வாதிட்டு மறுத்த ரோஹித், கோலி.. காரணம் என்ன?
அதே போல இந்தப் போட்டியிலும் பந்து வீச்சில் மேஜிக் செய்து நியூஸிலாந்தை 107 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி வெற்றி பெற வெற்றி பெற இந்தியா போராட உள்ளது. அதே சமயம் பெங்களூருவில் ஐந்தாவது நாளில் 90% மழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இப்போட்டியில் மழை வெல்வதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது



