
பெர்த் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அடுத்து வந்த படிக்கலும் டக் அவுட்டானார்.
அதற்கடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 5 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 32-3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணிக்கு மறுபுறம் கேஎல் ராகுல் நங்கூரமாக விளையாடினார். ஆனால் 26 (74) ரன்கள் எடுத்து அட்டகாசமாக விளையாடிய அவர் நடுவரின் சுமாரான தீர்ப்பால் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
அதற்கடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 11, வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களில் சீரான இடைவேளைகளில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தார்கள். அதனால் 73-6 என இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறிய போது ரிஷப் பண்ட் – அறிமுக வீரர் நித்திஷ் ரெட்டி ஜோடி சேர்ந்து விளையாடினார்கள். அதில் ரிஷப் பண்ட் தம்முடைய ஸ்டைலில் நிதானமும் அவ்வப்போது அதிரடியில் கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அந்த வகையில் ஏழாவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 37 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அடுத்து வந்த ஹர்ஷித் ராணா , கேப்டன் பும்ரா 8 ரன்னில் அவுட்டானார்கள். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நித்திஷ் ரெட்டி நிதானமாக அதிரடியாகவும் விளையாடி 41 ரன்கள் குவித்து அவுட்டானார்.
அதன் காரணமாக இந்தியாவை வெறும் 150 ரன்களுக்கு சுருட்டி ஆஸ்திரேலியா அசத்தியது. இதன் மூலம் பெர்த் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் குறைவான ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் 2018 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 326 ரன்கள் அடித்ததே முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும்.
இதையும் படிங்க: 5 முறை பயணம் செய்தும் அஷ்வினுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு.. என்ன கொடுமை சரவணா இது? – விவரம் இதோ
அந்தளவுக்கு இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவின் ஆட்டம் மோசமாக இருந்தது என்று சொல்லலாம். ஆஸ்திரேலிய அணிக்கு ஹேசல்வுட் 4, மிட்சேல் ஸ்டார்க் 2, கேப்டன் கமின்ஸ் 2, மிட்சேல் மார்ஷ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இதை அடுத்து இந்தியா பந்து வீச்சில் என்ன செய்யப் போகிறதோ என்று ரசிகர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கிறார்கள்.