இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விரைவில் துவங்குகிறது. அதற்கு முன்பாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 2 போட்டிகள் கொண்ட உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரின் முதல் போட்டி ட்ராவில் முடிந்தாலும் கருண் நாயர் இரட்டை சதத்தை அடித்தார்.
அதே போல சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் (2 முறை), ஜெய்ஸ்வால் ஆகிய இளம் வீரர்களும் அரை சதத்தை அடித்து அசத்தினார்கள். அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜூன் 6ஆம் தேதி நார்த்தம்டன் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
இந்தியா ஏ 348 ரன்ஸ்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு ஜெயிஸ்வால் 17, கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் துவக்க வீரர் ராகுல் அபாரமான சதத்தை அடித்து 116 ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய கருண் நாயர் 40, துருவ் ஜுரேல் 52, நிதிஷ் ரெட்டி 34 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
சர்துள் தாக்கூர் 19, டானுஷ் கோட்டியான் 15, தேஸ்பாண்டே 11 என முக்கிய வீரர்களும் கணிசமான ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா ஏ அணி 348 ரன்களை குவித்தது. இங்கிலாந்து லயன்ஸ் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு பென் மெக்கின்னி 12 ரன்னில் அவுட்டாகி சென்றார். இருப்பினும் 2வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டாம் ஹெய்ன்ஸ் 54 ரன்களில் அவுட்டானார்.
சிஎஸ்கே பவுலர்கள் அசத்தல்:
அவருடன் சேர்ந்து விளையாடிய எமிலியோ கே 71 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். மிடில் ஆர்டரில் ஜோர்டான் கோக்ஸ் 45 ரன்கள் அடித்து சவாலைக் கொடுத்த போது அவுட்டாக்கிய கலீல் அகமது கேப்டன் ஜேம்ஸ் ரா’வையும் 10 ரன்னில் காலி செய்தார். அதே போல ஜார்ஜ் கில் 0, கிறிஸ் ஓக்ஸ் 5 ரன்னில் அவருடைய வேகத்தில் விக்கெட்டை இழந்தார்கள்.
இதையும் படிங்க: என்னடா இது வாசிம் அக்ரமுக்கு வந்த சோதனை.. சச்சின் போல கெளரவித்து சொதப்பிய பாகிஸ்தான்?
இறுதியில் ஜோஸ் டாங் 36*, பஃர்ஹான் அஹ்மத் 24 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்து லயன்ஸ் அணியை 327 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா ஏ அணி 21 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியா ஏ அணிக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாடும் கலீல் அகமது 4, அன்சுல் கம்போஜ் 2 மற்றும் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.



