இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களை குவிக்க இந்திய அணி 336 ரன்களை குவித்தது இதன் மூலம் 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 294 ரன்களை அடித்து இரண்டாவது இன்னிங்சை முடித்துக் கொண்டது. அதன் பின்னர் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்த வரை 300 ரன்களுக்கு மேல் அடிப்பது என்பது எப்போதும் சவாலான ஒரு விடயம் தான். அந்த வகையில் இந்த சவாலை விரட்டிய இந்திய அணி இன்று அசத்தலாக பேட்டிங்கை விளையாடி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக துவக்க வீரரான ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற தனது பொறுப்பை உணர்ந்து விளையாடிய கில் 91 ரன்கள் குவித்து சிறப்பான துவக்கம் கொடுத்தார்.
அதன்பின்னர் புஜாரா அரைசதம் அடித்தும், ரஹானே 24 ரன்கள் குவித்தும் ஓரளவு மிடில் ஓவர்களில் தாக்கு பிடித்தனர். இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கடந்த போட்டியில் விளையாடியதைப் போலவே இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 138 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 89 ரன்களை அடித்தார்.
தமிழக சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளை சந்தித்த நிலையில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 22 ரன்களை அடித்தார். இவர்கள் இருவரும் இறுதியில் காண்பித்த அதிரடி மூலம் இந்திய அணி பெரிய இலக்கினை சேஸிங் செய்து வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றியை பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் 32 ஆண்டு கால சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த போட்டி நடைபெற்ற பிரிஸ்பன் மைதானத்தில் இதுவரை 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை எந்தவொரு அணியும் வீழ்த்தியதில்லை என்றும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தான் அவர்களை அந்த மைதானத்தில் வீழ்த்தி சாதனை புரிந்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.