வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு பின் ஜிம்பாப்வேவுக்கு பறந்துள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் இந்திய நேரப்படி மதியம் 12.45 மணிக்கு நடைபெறும் இந்த தொடரின் கோப்பையை வெல்வதற்காக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத இந்திய அணியை சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் தோற்கடிக்க ஜிம்பாப்வேயும் போராட உள்ளது. குறிப்பாக கடந்த வாரம் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அபாரமாக செயல்பட்டு 2 கோப்பைகளையும் வென்று நல்ல பார்மில் இருக்கும் அந்த அணி அதே புத்துணர்ச்சியுடன் வலுவான இந்தியாவுக்கு சவால் கொடுக்க தயாராகியுள்ளது.
மறுபுறம் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இதைவிட வலுவான வெஸ்ட் இண்டீஸை வரலாற்றிலேயே முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் சமீபத்திய ஒருநாள் தொடரில் தோற்கடித்த இந்திய அணியில் இடம் பிடித்திருந்த பெரும்பாலான வீரர்கள் இந்த தொடரிலும் விளையாடுகின்றனர். எனவே ஜிம்பாப்வேயை விட நல்ல பார்மில் நல்ல புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் இந்தியாவும் இந்த தொடரில் அந்த அணியை தோற்கடித்து 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றி பெறுவதற்கு தயாராகியுள்ளது.
ஹராரே மைதானம்:
இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த தொடரின் 3 போட்டிகளுமே ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் இருக்கும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 1992இல் உருவாக்கப்பட்ட இந்த மைதானம் ஜிம்பாப்வேயில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகளையும் நடத்தும் முதன்மை மைதானமாக திகழ்கிறது. சுமார் 10000+ ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் கடந்த 1992 முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
1. இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை நடைபெற்றுள்ள 155 போட்டிகளில் 74 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன, 78 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன.
2. இம்மைதானத்தில் வரலாற்றில் 143 போட்டிகளில் விளையாடியுள்ள ஜிம்பாப்வே 45 வெற்றிகளையும் 96 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.
3. இங்கு வரலாற்றில் 21 போட்டிகளில் விளையாடிய இந்தியா 16 வெற்றிகளையும் 5 தோல்விகளின் பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஜிம்பாப்வேக்கு எதிராக 16 போட்டிகளில் விளையாடிய இந்தியா 14 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.
இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த டாப் இந்திய 3 பேட்ஸ்மேன்கள்:
1. அம்பத்தி ராயுடு : 369
2. சச்சின் டெண்டுல்கர் : 314
3. முகமத் கைப் : 293
இந்த மைதானத்தில் அதிக சதங்களை இந்திய வீரர்களாக அம்பத்தி ராயுடு, சச்சின் டெண்டுல்கர், முகமது கைஃப், விராட் கோலி, யுவராஜ் சிங், கே எல் ராகுல், ஷிகர் தவான், கேதர் ஜாதவ் ஆகியோர் அதிகபட்சமாக தலா 1 சதங்களை அடித்துள்ளார். அதேப்போல் அம்பத்தி ராயுடு, சச்சின் டெண்டுல்கர், முகமது கைஃப், விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 அரை சதங்கள் அடித்துள்ளனர். இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன் அம்பாதி ராயுடு : 124*, 2016
இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 3 இந்திய பவுலர்கள்:
அஜித் அகர்கர் : 14
ஹர்பஜன் சிங் : 11
ஜஸ்பிரித் பும்ரா/அமித் மிஸ்ரா : தலா 9
இந்த மைதானத்தில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பந்து வீச்சாளராக இர்பான் பதான் (5/27) திகழ்கிறார். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 294/8
வெதர் ரிப்போர்ட்:
இந்த தொடர் நடைபெறும் ஹராரே நகரில் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய 3 நாட்களிலுமே நல்ல வெயில் அடிக்கும் என்பதால் இந்த தொடர் முழுவதுமே மழையின் குறுக்கீடுடின்றி முழுமையாக நடைபெற உள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் போட்டியை கண்டு களிக்கும் வகையில் வரலாற்றில் எப்போதுமே இந்த மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. ஓரளவு பிளாட்டாக காணப்படும் இங்குள்ள பிட்சில் 17 முறை 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. சமீபத்திய வங்கதேச ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் கூட அந்த அணி நிர்ணயித்த 300 ரன்களை ஜிம்பாப்வே சேசிங் செய்து வென்றது.
எனவே இங்கு நிதானத்தையும் திறமையையும் வெளிப்படுத்தும் பேட்ஸ்மென்கள் பெரிய ரன்களை அடிக்கலாம். அதே சமயம் முழு திறமையை வெளிப்படுத்தும் பவுலர்களும் வழக்கம் போல நல்ல விக்கெட்டுகளை எடுப்பார்கள். இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோர் 231 என்ற நிலையில் வரலாற்றில் இங்கு சேசிங் செய்த போட்டிகளில் அதிக வெற்றிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த தொடரில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் சேசிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம். அல்லது முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களுக்கு மேல் எடுத்தால் வெற்றி உறுதியாக கிடைக்கும்.



