வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து இந்த 2 அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

பிப்ரவரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த டி20 தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 16ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது. ஒருநாள் தொடரை போலவே இந்த டி20 தொடரையும் வெற்றி பெற்று சொந்த மண்ணில் மீண்டும் வெற்றிநடை போட இந்தியா தயாராகி உள்ளது. மறுபுறம் ஒருநாள் தொடரில் பெற்ற தோல்விக்கு இந்த டி20 தொடரில் பதிலடி கொடுக்க அதிரடி வீரர்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியும் போராட உள்ளது. எனவே இந்த தொடரில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
உத்தேச இந்திய அணி:
வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலககோப்பை நடைபெற உள்ளதால் இந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் மிகச் சிறப்பான வீரர்களை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் புதிய கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். எனவே அந்த உலகக்கோப்பைக்கு தயாராகும் வண்ணம் இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளித்து அவர்களில் சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் களமிறங்கப் போகும் உத்தேச இந்திய அணியைப் பற்றி விவாதிப்போம்.

ஓப்பனிங்: இந்தியாவின் முதல் தொடக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவார் என்றாலும் அவருக்கு ஜோடியாக விளையாட இருந்த கேஎல் ராகுல் காயமடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். எனவே அணியில் உள்ள இஷான் கிசான் அல்லது ருதுராஜ் கைக்வாட் ஆகியோரில் இஷான் கிசான் ரோகித் சர்மாவுடன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இவர் தொடக்க வீரராக களம் இறங்கினார்.
மிடில் ஆர்டர்: 3 மற்றும் 4 ஆகிய இடங்களில் எந்தவித சந்தேகமும் இன்றி விராட் கோலியும் சூரியகுமார் யாதவும் விளையாடுவார்கள் என நம்பலாம். சமீபத்திய 3வது ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் விளாசிய ஷ்ரேயஸ் ஐயர் 5வது இடத்திலும் 6வது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் களம் இறங்குவார்கள் என நம்பப்படுகிறது.

ஆல் ரவுண்டர்கள்: ஆல் ரவுண்டர்கள் பிரிவில் ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருக்க தற்போது அணிக்கு திரும்பிய தமிழக வீரர் வாசிங்டன் சுந்தரும் நேற்று காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகினார். எனவே வெஸ்ட் இண்டீஸ்அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாக அசத்திய தீபக் ஹூடா 7வது இடத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
8வது இடத்தில் பேட்டிங்கில் ரன்களை அடிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்கும் ஷர்துல் தாகூர் அல்லது தீபக் சஹர் ஆகியோர் விளையாட தகுதியானவர்களாக உள்ளார்கள்.

பவுலர்கள்: கடந்த மதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் படுமோசமாக செயல்பட்ட அனுபவ வீரர் புவனேஷ்வர் குமாருக்கு கடைசி முறையாக இந்த டி20 தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு இந்த முதல் டி20 போட்டியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த போட்டியில் அவர் சொதப்பினால் அடுத்த போட்டியில் அவர் நீக்கப்படுவார் என தெரிய வருகிறது.
அதேபோல் 3வது வேகப்பந்து வீச்சாளராக கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாக களமிறங்கி அசத்திய ஹர்சல் பட்டேல் விளையாடுவார் என நம்பலாம். சுழல் பந்து வீச்சாளராக இளம் வீரர் ரவி பிஸ்னோய் மற்றும் அனுபவ வீரர் குல்திப் யாதவ் ஆகியோர் அணியில் இருந்தாலும் யூஸ்வென்ற சஹால் இடம் பிடிப்பார் என நம்பலாம்
.
வெஸ்ட்இண்டீஸ் முதல் டி20 போட்டிக்கான இந்திய உத்தேச அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிசான்/ருதுராஜ் கைக்வாட், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கீப்பர்), தீபக் ஹூடா, தீபக் சஹர்/ஷார்துல் தாகூர், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சஹால்



