வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையில் 3 – 0 (3) என்ற கணக்கில் இளம் வீரர்களுடன் ஒயிட் வாஷ் செய்து சாதனையுடன் கோப்பையை முத்தமிட்டது. அதை தொடர்ந்து துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் முதல் போட்டியில் அசத்திய இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* எனது கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இத்தொடரின் 2-வது போட்டி ஆகஸ்டு 1-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு செயின்ட் கிட்ஸ் & நேவிஸில் நடைபெறுகிறது.
முன்னோட்டம்:
வெஸ்ட் இண்டிஸ்: ஒருநாள் தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியிடம் சரணடைந்து சொந்த மண்ணில் மண்ணை கவ்விய வெஸ்ட் இண்டீஸ் தங்களுக்கு மிகவும் பிடித்த டி20 தொடரில் சிம்ரோன் ஹெட்மையர் போன்ற அதிரடியான வீரர்களின் வருகையால் கொதித்தெழுந்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப முதல் போட்டியில் முதல் 15 ஓவரில் அபாரமாக செயல்பட்ட அந்த அணி கடைசி 5 ஓவரில் ரன்களை வாரி வழங்கியது.
அதைவிட பேட்டிங்கிலும் கேப்டன் நிக்கோலஸ் பூரன் உட்பட அனைத்து முக்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் பெரிய தோல்வியை சந்தித்த அந்த அணி சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர்வதற்கு இப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா: மறுபுறம் இந்த சுற்றுப்பயணத்தில் ஆரம்பம் முதலே பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கச்சிதமாக செயல்பட்டு வெற்றி நடை போட்டு வரும் இந்தியாவுக்கு ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்கள் இந்த டி20 தொடரில் மேலும் பலத்தை சேர்த்துள்ளனர். முதல் போட்டியில் பேட்டிங்கில் போராடி பெரிய ரன்களை எடுத்த இந்திய அணியினர் பந்துவீச்சில் அனலாக செயல்பட்டு பெரிய வெற்றியைப் பெற்ற புத்துணர்ச்சியுடன் 2-வது போட்டியிலும் களமிறங்கி வெற்றி வாகை சூட போராட உள்ளனர்.
வார்னர் பார்க்:
இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றப்போகும் இந்த போட்டி செயிண்ட் கிட்ஸ் & நேவிஸில் உள்ளே பெசட்டெரி நகரில் இருக்கும் வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2006இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த மைதானம் 9000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரடி போட்டிகளை கண்டுகளிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
1. இந்த மைதானத்தில் கடந்த 2009 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 10 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 6 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 2 போட்டிகளில் மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றன. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.
2. இங்கு வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்ற 10 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பதிவு செய்து வலுவான அணியாக திகழ்கிறது. 2 போட்டியில் தோல்வியடைந்த நிலையில் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.
3. எனவே இம்மைதானம் அந்த அணிக்கு சாதகமாக இருந்து வரும் நிலையில் வரலாற்றில் முதல் முறையாக இம்மைதானத்தில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்ளும் இந்தியா இப்போட்டியில் கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது.
4. இந்த மைதானத்தில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச டி20 ஸ்கோர் : 182/6 – இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2019. அதே போட்டியில் வெறும் 45 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் இம்மைதானத்தில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
வெதர் ரிப்போர்ட்: இந்த போட்டி நடைபெறும் பெசட்டெரி நகரில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்பு எதுவுமில்லை என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே லேசான மேகமூட்டத்துடன் கூடிய இதமான வானிலை நிலவும் என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்: இப்போட்டி நடைபெறும் வார்னர் பார்க் மைதானம் வரலாற்றில் பேட்டிங் பவுலிங் இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது. இருப்பினும் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் இங்கு நிறைய போட்டிகளில் தடுமாறியுள்ளன. அதனாலேயே சேசிங் செய்யும் அணிகள் அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ளன. அதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்யும் அணிகளின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் நிதானமாக செயல்பட்டு பிட்ச்சின் தன்மையையும் கால சூழ்நிலைகளையும் புரிந்து கொண்டால் பெரிய அளவில் ரன்களை சேர்க்க முடியும்.
அவர்களுக்கு சவாலாக திறமையை வெளிப்படுத்தும் வேகம் மற்றும் சுழல் பவுலர்களுக்கு இந்த மைதானம் விக்கெட்டுகளை எடுக்க நல்ல உதவி செய்யும். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 121 ஆகும். 2-வது இன்னிங்ஸ் ஸ்கோர் 144 ஆகும். எனவே இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் யோசிக்காமல் பந்துவீச தீர்மானிப்பது வெற்றிக்கு விடலாம்.



