IND vs WI : மீண்டும் மிரட்டிய வெ.இ, கடைசி நேரத்தில் போராடி இந்தியா இளம் வீரர்களுடன் தொடரை கைபற்றியது எப்படி – முழுவிவரம்

Axar Patel Siraj IND vs WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2-வது போட்டி ஜூலை 24 இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு சாய் ஹோப் – கெய்ல் மேயர்ஸ் ஜோடி ஆரம்பத்திலேயே 65 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தது.

அதில் மேயர்ஸ் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 39 (23) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ப்ரூக்ஸ் உடன் மீண்டும் இணைந்த ஹோப் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலுப்படுத்திய போது 35 (36) ரன்களில் சமர் ப்ரூக்ஸ் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த பிரண்டன் கிங் டக் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் நிக்கலஸ் பூரன் உடன் மீண்டும் நங்கூரம் போட்ட ஷாய் ஹோப் நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

ஹோப் அபாரம்:
இந்த ஜோடியில் வென்றே தீர வேண்டும் என்ற இந்த முக்கியமான போட்டியில் பொறுப்பை உணர்ந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 1 பவுண்டரி 6 சிக்சருடன் 74 (77) ரன்கள் குவித்து 4-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை முழுமையாக மீட்டெடுத்து அவுட்டானார். அந்த சமயத்தில் வந்த ரோவ்மன் போவல் 13 (10) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக இந்தியாவை வெளுத்து வாங்கிய சாய் ஹோப் 8 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 115 (135) ரன்கள் விளாசி 49-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அவருடன் ஷெபார்ட் 14* (11) ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 311/6 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷார்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 312 என்ற பெரிய இலக்கை துரத்திய இந்தியாவுக்கு இம்முறையும் 48 ரன்கள் நல்ல ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியில் கேப்டன் ஷிகர் தவான் 13 (31) ரன்களில் தடுமாறி ஆட்டமிழக்க மறுபுறம் ஓரளவு சிறப்பாக பேட்டிங் செய்த சுப்மன் கில் 5 பவுண்டரிகளுடன் 43 (49) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அடுத்த சில ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் மீண்டும் 9 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 79/3 என தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் – சஞ்சு சாம்சன் பொறுப்பாக ரன்களை சேர்க்க தொடங்கியது. மிடில் ஆர்டரில் நங்கூரமாக பேட்டிங் செய்ய முயற்சித்த இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு முக்கியமான 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய போது 4 பவுண்டரி 1 சிக்சருடன் 63 (71) ரன்களில் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார்.

போராடிய இந்தியா:
அவரை போலவே பொறுப்புடன் பேட்டிங் செய்த சஞ்சு சாம்சன் 3 பவுண்டரி 3 சிக்சருடன் தனது முதல் அரை சதத்தை அடித்து 54 (51) ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானதால் பின்னடைவு ஏற்பட்டது. அந்த இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா – அக்சர் படேல் 6-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்காக போராடியபோது 33 (36) ரன்களில் தீபக் ஹூடா ஆட்டமமிழந்தது போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது.

- Advertisement -

ஏனெனில் அடுத்து வந்த ஷார்துல் தாகூர் 3 (6) ரன்களிலும் ஆவேஷ் கான் 10 (12) ரன்களிலும் கடைசி நேரத்தில் சீரான இடைவெளியில் அவுட்டாகி இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தனர். ஆனாலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற அக்ஷர் பட்டேல் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு அரைசதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்காக போராடினார்.

அதனால் கடைசி ஓவர் வரை சென்ற இப்போட்டியில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட போது 2-வது பந்தில் சிங்கிள் எடுத்த அவரிடம் 3-வது பந்தில் சிங்கிள் எடுத்த சிராஜ் மீண்டும் ஸ்டிரைக்கை கொடுத்தார். அப்போது கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட போது அபார சிக்சரை பறக்க விட்ட அக்ஷர் பட்டேல் இந்தியாவை 49.4 ஓவரில் 312/8 ரன்களை எடுக்க வைத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றிபெற வைத்தார்.

அசத்தல் அக்சார்:
இப்போட்டியில் ஷாய் ஹோப் நங்கூரமான ஆட்டத்தால் பெரிய ரன்கள் எடுக்கும் அளவுக்கு இந்தியாவின் பந்துவீச்சு சுமாராகவே இருந்தது. இருப்பினும் இளம் அணியாக இருந்தாலும் வழக்கம் போல பலமே பேட்டிங் தான் என்ற நிலைமையில் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரைத் தவிர களமிறங்கிய அத்தனை பேட்ஸ்மேன்களும் 30, 40, 50 போன்ற ரன்கள் எடுத்ததால் ரன் ரேட்டை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருந்த இந்தியா கடைசியில் விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்க தெரிந்தது.

அதனால் 74 பந்துகளில் 114 ரன்கள் தேவைப்பட்ட போது நங்கூரமாகவும் அதிரடியாகவும் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 64* (35) ரன்களை 182.86 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட அக்சர் பட்டேல் போராடி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இளம் வீரர்களைக் கொண்ட ஷிகர் தவன் தலைமையிலான இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. மறுபுறம் வாழ்வா – சாவா போட்டியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்தாலும் கடைசி நேரத்தில் பந்துவீச்சில் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் மீண்டும் தலைகுனிவை சந்தித்துள்ளது.

Advertisement