இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. 2012 முதல் தொடர்ச்சியாக சொந்த மண்ணில் வெற்றி நடை போட்டு வந்த இந்தியா கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக தோற்றது.
அதனால் சீனியர்கள் கழற்றி விடப்பட்டு உருவாக்கப்பட்ட கில் தலைமையிலான புதிய அணி இங்கிலாந்தில் 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது. அதைத் தொடர்ந்து இளம் இந்திய அணி சொந்த மண்ணில் முதல் முறையாக இத்தொடரில் விளையாடுகிறது. எனவே புதிய இந்திய அணி சொந்த மண்ணில் எப்படி விளையாடுகிறது? வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்:
மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணி சமீப காலங்களாகவே கத்துக்குட்டிகளிடம் தோற்று வருவதால் இந்தியாவுக்கு சவாலை கொடுக்குமா? என்ற கேள்வி காணப்படுகிறது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் இரண்டாம் தேதி அகமதாபாத் நகரில் துவங்குகிறது. வரலாற்றில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 100 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன.
அதில் வெஸ்ட் இண்டீஸ் 30, இந்தியா 23 வெற்றிகளைப் பெற்றுள்ளன. 47 போட்டிகள் டிராவில் முடிந்தன. 2002க்குப்பின் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. இந்தியா தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 47 போட்டிகளில் எதிர்கொண்டு 13 வெற்றிகள் 14 தோல்விகளை சந்தித்துள்ளது. 20 போட்டிகள் ட்ராவில் முடிந்தன.
வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தைச் சுற்றிய பகுதிகளில் முதல் நாளில் 40% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 2, 3வது நாட்களில் ஓய்வெடுக்கும் மழை 4, 5வது நாட்களில் மீண்டும் வந்து 50 – 60% பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
அகமதாபாத் மைதானத்தில் இப்போட்டி செம்மண்ணால் உருவாக்கப்பட்ட பிட்ச்சில் நடைபெற உள்ளது. சமீபத்திய சொந்த மண்ணில் சந்தித்த தோல்விகளால் இம்முறை பிட்ச்சில் லேசான புற்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முதல் சில நாட்களில் பிட்ச் வேகம், பவுன்ஸ் ஆகியவற்றுக்கு சாதகமாக இருக்கலாம்.
இதையும் படிங்க: பொய் பேசும் ஊடங்கள்.. இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. கோப்பை வேணும்னா அங்க வாங்க.. நக்வி ட்வீட்
நாட்கள் செல்ல செல்ல ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தபவர்களாக இருப்பார்கள். எனவே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க சூழ்நிலையை உணர்ந்து விளையாடுவது அவசியம். இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.



