வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் அசத்திய இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் செய்து கோப்பையை முத்தமிட்டது. அதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 29-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு டிரினிடாட் நகரில் துவங்கியது. கேப்டன் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் திரும்பிய நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மாவுடன் எதிர்பாராத வகையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 44 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 1 சிக்சருடன் 24 (16) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க அடுத்த சில ஓவர்களில் ரிஷப் பண்ட் 14 (12) ரன்களில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே ஹர்திக் பாண்டியாவும் 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடித்து 64 (44) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.
டிகே பினிஷிங்:
அந்த நிலையில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 2 பவுண்டரியுடன் 16 (13) ரன்களில் அவுட்டானதால் 16 ஓவரில் 138/6 என தடுமாறிய இந்தியா 160 ரன்களை தாண்டுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அந்த அழுத்தம் நிறைந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் வழக்கம்போல ஆரம்பத்தில் நிதானமாகவும் கடைசி கட்ட ஓவர்களில் சரவெடியாகவும் செயல்பட்டு 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (19) ரன்கள் விளாசி அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் அஷ்வின் 13* (10) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் இந்தியா 190/6 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதை தொடர்ந்து 191 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு அர்ஷிதீப் சிங் வீசிய 2-வது ஓவரில் கெய்ல் மேயர்ஸ் 15 (6) ரன்களில் அவுட்டாக மற்றொரு தொடக்க வீரர் சமர் ப்ரூக்ஸ் புவனேஸ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் 20 (15) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் ஜடேஜாவின் பந்தில் ரன் எதுவுமின்றி கிளீன் போல்டானார். அதனால் 42/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய வெஸ்ட் இண்டீசை காப்பாற்றுவார் என கருதப்பட்ட கேப்டன் நிக்கோலஸ் பூரனும் 18 (15) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்த சில ஓவர்களில் ரோவ்மன் போவல் 14 (17) ரன்களில் போல்டாகி வெளியேறினார்.
அனலான பவுலிங்:
அடுத்த ஓவரிலேயே அதிரடியாக விளையாடி காப்பாற்றுவார் என கருதப்பட்ட சிம்ரோன் ஹெட்மையர் அஷ்வின் பந்தில் 14 (15) ரன்களில் ஆட்டமிழக்க அதற்கு அடுத்த ஓவரில் ஓடின் ஸ்மித் டக் அவுட்டானதால் அந்த அணியின் தோல்வி உறுதியானது. ஏனெனில் அடுத்து பேட்ஸ்மேன்களில் அகில் ஹொசைன் 11 (15) ரன்களும் கீமோ பால் 19* (22) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 122/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அஷ்வின், அரஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் புவனேஸ்வர் குமார் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று மீண்டும் அசத்த துவங்கியுள்ளது. இந்த வெற்றிக்கு முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு டாப் ஆர்டரில் ரோகித் சர்மா பொறுப்பை காட்டி சேர்த்த 64 ரன்களை சூரியகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வீணடிக்க தெரிந்தார்கள்.
ஆனால் இறுதியில் அஷ்வினுடன் இணைந்து வெறும் 4 ஓவரில் 52 ரன்களை குவித்து அபார பினிஷிங் கொடுத்த தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் இந்தியாவை தூக்கி நிறுத்தினார். அதேபோல் ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்ததால் இந்த டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ஏ தீரவேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாக ஆரம்பம் முதலே தரமான இந்திய பவுலிங்க்கு பதில் சொல்ல முடியாத வெஸ்ட் இண்டீஸ் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்ததால் ரன்ரேட்டும் தாறுமாறாக எகிறியது.
அதை கட்டுப்படுத்த சிம்ரோன் ஹெட்மையர் போன்ற அதிரடி காட்டக்கூடிய பலம் வாய்ந்த வீரர்கள் அனைவரும் பொறுப்பின்றி பெரிய ரன்களை எடுக்காமல் ஆட்டமிழந்ததால் விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் டி20 தொடரையும் தோல்வி முகத்துடன் துவக்கியுள்ளது. மறுபுறம் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் உழைப்பை வீணடிக்காத வகையில் அனைத்து இந்திய பவுலர்களும் பொறுப்புடனும் கச்சிதமாகவும் செயல்பட்டு ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு முன்னிலை பெற்று கொடுத்துள்ளனர்.



