IND vs WI : முதல் டி20 நடக்கும் பிரையன் லாரா மைதானத்தின் சிறப்பம்சம், வரலாற்று புள்ளிவிவரம் – பிட்ச், வெதர் ரிப்போர்ட்

Brian Lara Cricket Stadium Ground
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் அபாரமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து கோப்பையை முத்தமிட்டது. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 29இல் துவங்குகிறது. வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடக்கும் இந்த தொடரின் கோப்பையை வெல்ல இரு அணிகளும் தீவிரமாக போராட உள்ளன.

இதில் நிக்கோலஸ் பூரன் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்தியாவை சாய்க்க முடியாமல் சொந்த மண்ணில் மண்ணை கவ்விய வெஸ்ட் இண்டீஸ் இந்த டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு பழிக்குப் பழி தீர்த்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர முழு மூச்சுடன் விளையாட உள்ளது. மேலும் என்ன தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறினாலும் டி20 என்று வந்தால் எப்போதுமே அதிரடியாகவும் அட்டகாசமாகவும் விளையாடக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் இந்த தொடரில் இந்தியாவுக்கு கடுமையான சவாலை அளிக்க தயாராகியுள்ளது.

- Advertisement -

மறுபுறம் முக்கிய வீரர்கள் இல்லாமல் வெஸ்ட் இண்டீசை ஒருநாள் தொடரில் சாய்த்த புத்துணர்ச்சியுடன் காணப்படும் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இணைந்துள்ளார்கள். இதனால் மேலும் பலமடைந்துள்ள இந்தியா சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலிக்கிறது. எனவே ரோகித் சர்மா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு இந்த டி20 தொடரின் கோப்பையையும் வெல்ல இந்தியாவும் தயாராகியுள்ளது.

லாரா மைதானம்:
அனல் பறக்கப்போகும் இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 29-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு டிரினிடாட் & டபாகோ நகரில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பெயரிடப்பட்டுள்ள பிரைன் லாரா கிரிக்கெட் அகடமி மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2007இல் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு 2017இல் நிறைவு பெற்றுள்ள இந்த மைதானம் 15000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனாலும் இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு ஆடவர் சர்வதேசப் போட்டியும் நடைபெற்றதில்லை என்பது ஆச்சரியமாகும். ஆம் கடந்த 2007இல் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற உலகக் கோப்பையின் போது இந்த மைதானத்தில் முக்கிய போட்டிகளை நடத்தும் வகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. அந்த தாமதம் பல வருடங்களை கடந்து ஒருவழியாக 2017இல் முடிந்தது.

அதை தொடர்ந்து கடந்த 2018இல் ஒருசில சர்வதேச மகளிர் ஒருநாள் மற்றும் டி20 நடைபெற்ற நிலையில் சமீப காலங்களில் கரீபியன் லீக் தொடரின் குறிப்பிட்ட சில போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. எனவே இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இந்தப் போட்டி தான் வரலாற்றிலேயே இந்த மைதானத்தில் நடக்க போகும் முதல் சர்வதேச போட்டியாகும் என்பது இப்போட்டியின் சிறப்பம்சமாகும்.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் கடைசி 2 போட்டிகளில் மழை குறுக்கிட்டது. குறிப்பாக கடைசி போட்டியில் 35 ஓவர்களாக போட்டியை குறைக்கும் அளவுக்கு வெளுத்து வாங்கிய மழை இப்போட்டி நடைபெறும் டிரினிடாட் நகரிலும் போட்டி நாளன்று ஒரு கை பார்க்க உள்ளது. ஆம் இந்த முதல் போட்டி நடைபெறும் நாளன்று உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் 54% மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மதியம் 12 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்போட்டி முழுமையாக நடைபெறுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் 3-வது ஒருநாள் போட்டியை போல முடிந்தளவு ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டியின் முடிவை காண்பதற்கு நடுவர்களும் தயாராக உள்ளனர்.

பிட்ச் ரிப்போர்ட்:
இந்த மைதானம் புதிது என்ற நிலைமையில் சமீப காலங்களில் நடைபெற்ற கரீபியன் தொடரில் பெரும்பாலான போட்டிகளில் 150 – 180 வரையில் ரன்கள் எடுக்கப்பட்டன. எனவே இந்த மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோக திறமையை வெளிப்படுத்தும் பந்து வீச்சாளர்களும் இங்கு விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்பதால் பேட்டிங் பவுலிங் என இரண்டும் இப்போட்டியில் சமமாக மோதிக்கொள்ளும் என்று நம்பலாம்.

இந்த மைதானத்தில் இதுவரை நடந்த கரீபியன் போட்டிகளின் அடிப்படையில் நடைபெற்ற 30 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 13 முறை வென்றுள்ளது 17 முறை சேசிங் செய்து அணி வென்றுள்ளது. மேலும் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 141 ஆகும். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement