இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கொழும்பு நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் இரு அணிகளுமே சரியாக 230 ரன்கள் அடித்ததால் போட்டி டை என்று அறிவிக்கப்பட்டு எந்த அணிக்கும் வெற்றி தோல்வி இல்லை என்று நடுவர்கள் தெரிவித்திருந்தனர். இதனை கண்ட ரசிகர்கள் சூப்பர் ஓவர் நடைபெறாமல் போனதால் தங்களது ஏமாற்றத்தை கருத்துக்களாக பகிர்ந்திருந்தனர்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு டி20 தொடரின் போது ஒரு போட்டி சமநிலையில் முடிந்த வேளையில் அந்த போட்டியில் சூப்பர் ஓவர் வைக்கப்பட்டு அதில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் டி20 போட்டியில் சூப்பர் ஓவர் வைக்கப்பட்டு ஒருநாள் தொடரின் போது சூப்பர் ஓவர் ஏன் வைக்கப்படவில்லை? என்பது குறித்த கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
முதலாவது போட்டி டை ஆனதை தொடர்ந்து தற்போது மூன்றாவது போட்டி டை-ஆனால் என்ன நடக்கும்? சூப்பர் ஓவர் விதிமுறை இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து இலங்கை அணியின் நிர்வாகி ஒருவர் தற்போது தெளிவான விளக்கம் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
முதல் ஒருநாள் போட்டியின் போது சூப்பர் ஓவர் தேவை இல்லை என நடுவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தவறு செய்து விட்டார்கள். ஆனால் மூன்றாவது போட்டி டையானால் சூப்பர் ஓவர் நிச்சயம் நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். முதல் ஒருநாள் போட்டிக்கான நடுவர்களாக ரஞ்சன் மதுகலே, களநடுவர் ஜோயல் வில்சன், ரிசர்வ் நடுவர் பல்லகுருவே, டிவி ஆம்பியர் பால் ரீபல் ஆகியோர் சேர்ந்து சூப்பர் ஓவர் தேவையில்லை என்று முடிவு செய்தார்கள்.
ஆனால் நிச்சயம் இறுதிப்போட்டியில் முடிவை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் ஒருநாள் போட்டிகளிலும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைசி போட்டி டை-ஆகும் பட்சத்தில் நிச்சயம் சூப்பர் ஓவர் நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க : இந்திய ஒருநாள் அணியில் ஃபிட்டாகாத சிவம் துபேவுக்கு பதில்.. அவரே விளையாடிருக்கலாம்.. சல்மான் பட் விமர்சனம்
ஐசிசி விதிமுறைப்படி இருநாட்டு தொடர்களுக்கு இடையே ஒருநாள் போட்டிகளின் போது சூப்பர் ஓவர் வேண்டுமா? வேண்டாமா? என்பதை போட்டிகளை பங்கேற்கும் அணி நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் பல்வேறு அணிகள் கலந்து கொள்ளும் ஐசிசி தொடர்களில் கட்டாயம் போட்டி டையானால் சூப்பர் ஓவர் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



