IND vs RSA : மீண்டுமொரு வாழ்வா – சாவா போட்டியில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்த இந்தியா மாஸ் வெற்றி – வெற்றி பெற்றது எப்படி?

IND vs RSA Pant Chahal
Advertisement

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை வகித்தது. அதனால் சொந்த மண்ணில் கோப்பையை வெல்வதற்கு நிச்சயம் வென்றே தீரவேண்டும் என்ற சூழ்நிலையில் ஜூன் 17-ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் துவங்கிய 4-வது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்ய களமிறங்கியது. இருப்பினும் தொடக்க வீரர் ருத்ராஜ் கைக்வாட் வெறும் 5 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 4 (2) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

IND vs SA

போதாக்குறைக்கு மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷனும் 27 (26) ரன்களில் நடையை கட்டியதால் 40/3 என சுமாரான தொடக்கம் பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே மீண்டும் தடுமாறியது. அந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் சரிவை சரிசெய்வதற்கு பொறுமையாக பேட்டிங் செய்தாலும் மீண்டும் பொறுப்பில்லாமல் 17 (23) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

காப்பாற்றிய பாண்டியா – கார்த்திக்:
அதனால் 13 ஓவரில் 81/4 என தவித்த இந்தியா 150 ரன்களை தாண்டுமா என்று ரசிகர்கள் கவலையடைந்த வேளையில் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நிதானமாகவும் அதேசமயம் அதிரடியாகவும் ரன்களைச் சேர்த்தனர். 15 ஓவர்களுக்குப் பின் கியரை மாற்றி அதிரடியாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு முக்கியமான 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ஓரளவு மீட்டெடுத்த போது 3 பவுண்டரி 3 சிக்சருடன் 46 (31) ரன்கள் எடுத்த பாண்டியா கடைசி நேரத்தில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் 9 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்த தினேஷ் கார்த்திக் 55 (27) ரன்களை அதிரடியாக குவித்து போராடி ஆட்டமிழந்தார்.

Dinesh Karthik vs RSA

இறுதியில் அக்சர் படேல் 8* (4) ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் இந்தியா 169/6 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு 3-வது போட்டியை போலவே முதல் ஓவரில் இருந்தே பொறுப்புடன் பந்துவீசிய இந்திய பவுலர்கள் பெரிய ரன்களை எடுக்க விடாமல் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்தனர். அதில் முதலாவதாக காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பிய குவின்டன் டி காக் 14 (13) ரன்களில் அவுட்டாகி செல்ல அவருடன் களமிறங்கிய கேப்டன் தெம்பா பவுமா டைவ் அடிக்கும் போது காயமடைந்து 8 (11) ரன்களில் ரிட்டயர்டு அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

இந்தியா மாஸ்:
அந்த நிலைமையில் களமிறங்கிய பிரிடோரியஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் வேன் டெர் டுஷன் 20 (20) ஹென்றிச் க்ளாஸென் 8 (8) டேவிட் மில்லர் 9 (7) என முதல் 2 போட்டிகளில் தோல்வியை பரிசளித்த முக்கிய பேட்ஸ்மேன்களை பெரிய ரன்கள் எடுக்க விடாமல் அவுட் செய்த இந்திய பவுலர்கள் தென் ஆப்பிரிக்காவின் மிடில் ஆர்டரை உடைத்தனர். அதனால் 74/5 என சரிந்த தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 16.5 ஓவர்களில் அந்த அணியால் 87/9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

Harshal Patel David Miller IND vs RSA

இறுதியில் பவுமா பேட்டிங் செய்ய வராததால் 82 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 2* என்ற கணக்கில் சமன் செய்து சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக மண்ணை கவ்வ மாட்டோம் என்று தென் ஆப்பிரிக்காவுக்கு மாஸ் பதிலடி கொடுத்துள்ளது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளும் சஹால் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

- Advertisement -

சாய்த்தது எப்படி:
முதல் 2 போட்டிகளில் இந்தியாவின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சு தான் முக்கிய காரணமாக இருந்தது. அதை சரியாக புரிந்துகொண்ட இந்திய பவுலர்கள் 3-வது போட்டியில் பொறுப்பை உணர்ந்து பந்து வீசியது போல் இந்த முறையும் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங்கில் போராடி எடுத்த ரன்களை வீணடிக்காத வகையில் ஆரம்பம் முதலே அதிக ரன்களை விடாமல் துல்லியமாக பந்துவீசினர்.

IND vs RSA Chahal Axar Patel

அதனால் நெருக்கடிக்கு உள்ளான தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ரன் ரேட்டை குறைப்பதற்காக பல தருணங்களில் பவுண்டரி அடிக்க முயன்றனர். ஆனால் இம்முறை தரமாக பந்து வீசியதால் அவர்கள் அடித்த பவுண்டரிகள் விக்கெட்டுகளாக மாறி இந்தியாவுக்கு வெற்றியை பரிசளித்தது. இந்த அபார வெற்றியால் புத்துணர்ச்சி அடைந்துள்ள இந்தியா இதேபோல் கடைசி போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு தென் ஆப்பிரிக்காவை மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement