தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அத்தொடர் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா சவாலைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா, மார்க்ரம், மார்கோ யான்சென், கேசவ் மஹாராஜ் போன்ற தரமான வீரர்கள் நிறைந்துள்ளனர். மறுபுறம் தென்னாப்பிரிக்காவின் சவாலை சமாளித்து இந்தியா தொடரை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வரலாற்றில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மொத்தம் 44 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன.
வரலாற்று புள்ளிவிவரம்:
அதில் இந்தியா 16, தென் ஆப்பிரிக்கா 18 வெற்றிகள் பெற்றுள்ளன. 10 போட்டிகள் டிராவில் முடிந்தன. இந்திய மண்ணில் இரு அணிகளும் 19 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 11 வெற்றிகளைப் பெற்று வலுவான அணியாகத் திகழ்கிறது. தென்னாபிரிக்க 5 போட்டிகளில் வென்ற நிலையில் 3 போட்டிகள் டிராவில் முடிந்தன. 2010க்குப்பின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒருமுறை கூட தோற்றதில்லை.
கொல்கத்தா மைதானம்:
இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் காலை 9.30 மணிக்குத் துவங்குகிறது. 1864ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த பழமையான மைதானத்தில் 1934 முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அங்கே இதுவரை நடைபெற்ற 42 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 13 வெற்றிகளையும் 9 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 20 போட்டிகள் டிராவில் முடிந்தன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2 வெற்றி 1 தோல்வியை சந்தித்துள்ளது.
வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் 5 நாட்களிலும் கொல்கத்தாவில் 5 சதவீதத்திற்கும் மேல் மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. பெரும்பாலான சமயங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
ஈடன் கார்டன்ஸ் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருக்கும் என்று அதன் தயாரிப்பாளர் சுஜன் முக்கர்ஜி தெரிவித்துள்ளார். பிட்ச்சில் லேசான பச்சை புற்கள் விடப்பட்டுள்ளதால் நல்ல பவுன்ஸ், வேகம் இருக்கும். அதனால் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சவாலைக் கொடுப்பார்கள்.
இதையும் படிங்க: பாபர் அசாமில் ஆல் டைம் சாதனையை நெருங்கும் சுப்மன் கில் – தென்னாப்பிரிக்க தொடரில் முந்துவாரா?
நாட்கள் செல்ல செல்ல ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்துவார்கள். எனவே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க சூழ்நிலைகளை உணர்ந்து நிதானத்துடன் விளையாடுவது அவசியமாகும். வரலாற்றில் கொல்கத்தாவில் நடைபெற்ற 42 போட்டிகளில் 12 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள், 10 முறை சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.



