ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டதை அடுத்து 2025 சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரை குறி வைத்து தற்போது துபாயில் தங்களது பயணத்தை துவங்கியுள்ளது. நடப்பு 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை வெகு சிறப்பாக எதிர்கொண்ட இந்திய அணியானது பிரமாதமான வெற்றியை ருசித்தது.
இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண சிறப்பு ஏற்பாடு :
அதன்மூலம் இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவிற்கு அடித்தளமிட்டு இந்த தொடரினை ஆரம்பித்துவிட்டது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முக்கிய லீக் ஆட்டமானது பிப்ரவரி 23-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு துவங்கும் இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவல் இருக்கும் வேளையில் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பும் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே பாதுகாப்பு காரணங்களால் இரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் மோதாமல் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிருவதால் இது போன்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த இந்தியா பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில் தமிழக ரசிகர்களுக்காக இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒரு சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.
அந்த வகையில் சென்னையில் உள்ள இரண்டு இடங்களில் இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பு இருப்பதாகவும் அதனை ரசிகர்கள் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் வந்து போட்டியை கண்டு ரசிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிராகவும்), பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகிலும்) இரண்டு மெகா திரைகள் அமைக்கப்பட்டு அதில் இந்தியா பாகிஸ்தான் போட்டி ஒளிபரப்பப்படும் என்ற ஸ்பெஷல் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : சதியை முறியடித்த விதி.. எவ்ளோ தடுத்தும் பாகிஸ்தான் மண்ணில் ஒலித்த இந்திய தேசிய கீதம் – என்ன நடந்தது?
எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் ஆவல் இருக்கும் வேளையில் தற்போது தமிழக ரசிகர்களுக்காக தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



