IND vs PAK : ஐபிஎல் எல்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க, அனல் பறந்த இந்தியா – பாக் போட்டி படைத்த அசத்தல் சாதனை

IND vs PAK Babar Azam Rohit Sharma
- Advertisement -

ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆசிய கோப்பை 2022 போட்டி துபாயில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. ஆகஸ்ட் 28ஆம் தேதியான நேற்று கடைசி ஓவர் வரை இரு அணிகளும் சரிக்கு சமமாக முழு பலத்துடன் மோதிக் கொண்ட அந்தப் போட்டியில் அழுத்தத்திற்கு அஞ்சாமல் அசத்திய இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்தியாவுக்கு எதிராக ஆரம்பம் முதலே தடுமாற்றமான பேட்டியை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாபர் அசாம் 10, பாகர் ஜமான் 10, இப்திகர் அஹமத் 28, குஷ்தில் ஷா 28, சடாப் கான் 10 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்ட அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 43 (42) ரன்கள் எடுத்தார். கடைசியில் ஹாரீஸ் ரவூப் 13* (7) தஹானி 16 (6) என டெயில் எண்டர்கள் முக்கியமான ரன்களை சேர்க்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அட்டகாசமாக செயல்பட்ட புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்களும் எடுத்தனர். அதை தொடர்ந்து 147 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டாகி நடையை கட்டினார்.

- Advertisement -

பதிலடி வெற்றி:
அதனால் மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு அடுத்து ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த சீனியர்கள்களில் கேப்டன் ரோகித் சர்மா 12 (18) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் விராட் கோலியும் 35 (34) ரன்களில் ஆட்டமிழந்தார். போதாகுறைக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும் 18 (18) ரன்களில் பெவிலியன் திரும்பியதால் 89/4 என இந்தியா தடுமாறியது. அப்போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக ஜோடி சேர்ந்து முக்கியமான 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரி 2 சிக்சருடன் கடைசி ஓவரில் 35 (29) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் அவருடன் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரியுடன் 33* (17) ரன்களை குவித்து சிக்சரை பறக்க விட்டு சூப்பரான பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.4 ஓவரில் 148/5 ரன்களை எடுத்து போராடி வென்ற இந்தியா கடைசியாக இதே துபாயில் மோதிய போது உலகக்கோப்பையில் முதல் முறையாக வரலாற்று அவமான தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து அசத்தியது.

- Advertisement -

ஓரமாக ஐபிஎல்:
இப்படி இந்தியா பதிலடி கொடுக்குமா என்பதற்காகவே கடந்த ஒரு மாதமாகவே இந்த போட்டிக்காக ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவியது. அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட் வெறும் போட்டியாக பார்க்காமல் கௌரவமாக கருதுவதால் அதில் வெற்றி பெறுவதற்கு முழு மூச்சை கொடுத்து ஆக்ரோஷமாக அனல் பறக்க மோதி கொள்வார்கள் என்பதால் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகளுக்கு உலக அளவில் தனி மவுசு உள்ளது. அதுபோக கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இவ்விரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் மோதாமல் இதுபோன்ற ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதுகின்றன.

அதனால் இவ்விரு அணிகளும் மோதும் போட்டிக்கான மவுசு முன்பை விட பன்மடங்கு எகிறியுள்ள நிலையில் நேற்று கடைசி ஓவர் வரை அனல் பறந்த இந்த போட்டியை ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் ஆன்லைன் வாயிலாக மட்டுமே லட்சக்கணக்கானவர்கள் பார்த்து மகிழ்ந்தனர். குறிப்பாக பரபரப்புக்கு மத்தியில் பாண்டியா சிக்சர் அடித்த கடைசி ஓவரை மட்டும் 1.30 கோடி ரசிகர்கள் நேரடியாக பார்த்துள்ளார்கள்.

கடந்த பல வருடங்களாக நேரலை போட்டிகளை ஒளிபரப்பி வரும் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பு வரலாற்றில் 1.30 ரசிகர்கள் ஒரே நேரத்தில் ஒரு போட்டியை பார்த்தது இதுவே முதல் முறையாகும். இதற்குமுன் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியை 87 லட்சம் பேர் பார்த்ததே முந்தைய சாதனையாகும்.

கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டு ஓவருக்கு ஓவர் அனல் பறக்கும் ரசிகர்கள் எதிர்பாராத திருப்பங்களை விருந்தாக படைத்து உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட்டாக விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது. அதனால் உலக அளவில் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் தொடராக ஐபிஎல் கருதப்படுகிறது. ஆனால் அதையே அசால்ட்டாக ஓரம்கட்டிய இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போதும் கிரிக்கெட்டில் நாங்கள் தான் நம்பர் 1 போட்டி என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

Advertisement