IND vs NZ : 3வது போட்டியில் வருண பகவான் வைத்துள்ள திட்டம் என்ன? மெக்லீன் பார்க் மைதானம் எப்படி – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

MCLEan Park Stadium Ground Napier
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோபையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த பின் நியூசிலாந்து பயணித்துள்ள இந்தியா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுப்பதால் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி களமிறங்கியுள்ள இத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் 2வது போட்டியில் சூரியகுமார் அதிரடியாக சதமடித்து 111* (51) ரன்கள் தெம்பில் 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நவம்பர் 22ஆம் தேதியன்று நடைபெறுகிறது. அதில் வென்று 2 – 0 (3) என்ற கணக்கில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து கோப்பையை வெல்ல பாண்டியா தலைமையிலான இளம் அணி முழுமூச்சுடன் போராடவுள்ளது. இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் ஒரு விக்கெட்டை கூட எடுக்காத பவுலர்கள் பார்முக்கு திரும்பியுள்ள நிலையில் பேட்டிங்கில் சூரியகுமார் போல இதர வீரர்களும் ரன்கள் குவித்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

- Advertisement -

மெக்லீன் பார்க்:
மறுபுறம் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரை ஏற்கனவே கோட்டை விட்ட நியூசிலாந்து குறைந்தபட்சம் சமன் செய்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலை நிமிர இப்போட்டியில் வெல்ல போராட உள்ளது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ள இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு நேப்பியர் நகரில் இருக்கும் மெக்லின் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 1952 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் இந்த பழமையான மைதானத்தில் 2017 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 10,500 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் 2 போட்டிகளில் சேசிங் செய்த அணியும் 2 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன. கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த நியூசிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இங்கு முதல் முறையாக இப்போது தான் இந்தியா விளையாடுவதால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய புள்ளி விவரங்கள் இல்லை.

- Advertisement -

வருண பகவான் திட்டம்:
முன்னதாக வெலிங்டன் நகரில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்ட நிலையில் மௌன்ட் மௌங்கனி நடைபெற்ற 2வது போட்டியிலும் மழை குறுக்கிட்டது. இருப்பினும் ரசிகர்களின் மகிழ்ச்சியை கெடுக்காத வகையில் உடனடியாக விலகிய மழை அப்படியே நேப்பியர் நகருக்கு பயணித்து இப்போட்டியிலும் விளையாடுவதற்கு தயாராகியுள்ளது. ஏனெனில் நேப்பியர் நகரில் போட்டி நாளன்று காலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பில்லை என்றாலும் மாலை 4 மணிக்கு மேல் சராசரியாக 50% மழை பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக நியூஸிலாந்து வானிலை மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக உள்ளூர் நேரப்படி போட்டி நடைபெறும் இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை முறையே 73%, 77%, 71%, 51%, என சராசரியாக 65% இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிய வருகிறது. அத்துடன் சுமார் 20 கி.மீ வேகத்தில் ஈரக்காற்று வீசும் என்று தெரிய வருவதால் இப்போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் 2வது போட்டியில் இதே போன்ற அச்சுறுத்தலை கொடுத்த மழை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததைப் போலவே இப்போட்டியிலும் விலகியிருக்க வேண்டும் என்பதே இருநாட்டு ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:
கடந்த போட்டி நடைபெற்ற பே ஓவல் மைதானம் போலவே இப்போட்டி நடைபெறும் மெக்லீன் பார்க் மைதானமும் வரலாற்றில் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் ஆரம்பகட்ட சூழ்நிலைகளை சமாளிக்கும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை குவிக்கலாம். ஏனெனில் இம்மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 171 ஆகும். மேலும் மொத்தமாக 2006 – 2021 வரை இங்கு நடைபெற்ற 25 டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி ஸ்கோர் 169 ஆகும்.

இருப்பினும் போட்டி நடைபெற நடைபெற இங்கு 2வது இன்னிங்ஸில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. அத்துடன் புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்களை எடுக்க வாய்ப்புள்ளது. மேலும் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து பெரிய ரன்களை குவித்தால் வெற்றி எளிதாகலாம்.

Advertisement