IND vs NZ : கடைசி போட்டியில் இந்தியா தலை நிமிர மழை வழிவிடுமா? கிறிஸ்ட்சர்ச் மைதானம் எப்படி – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த பின் நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 (3) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இருப்பினும் அடுத்ததாக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் அதே மழைக்கு மத்தியில் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 1 – 0* என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அதனால் நவம்பர் 30ஆம் தேதியன்று நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே குறைந்தபட்சம் இத்தொடரை சமன் செய்ய முடியும் என்ற கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளை வீழ்த்திய இளம் அணி நல்ல திறமைகளை கொண்டிருந்தும் முதல் போட்டியில் 306 ரன்கள் குவித்தும் பந்து வீச்சில் தடுமாறி தோற்றது. போதாக்குறைக்கு 2வது போட்டியில் மழை வந்து வெற்றி வாய்ப்பை பறித்ததது. அதனால் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரை குறைந்தபட்சம் சமன் செய்ய கடைசி போட்டியில் வெல்ல இந்திய அணியினர் முழு மூச்சுடன் போராட உள்ளனர். அந்தப் போராட்டத்தில் பேட்டிங் ஓரளவு சிறப்பாக இருக்கும் நிலையில் பந்து வீச்சு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

- Advertisement -

கிரிஸ்சர்ச் மைதானம்:
மறுபுறம் ஏற்கனவே முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து இப்போட்டியில் வென்று சொந்த மண்ணில் டி20 தொடரில் சந்தித்து தோல்விக்காக இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது. இதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி நவம்பர் 30ஆம் தேதியன்று கிறிஸ்சர்ச் நகரில் இருக்கும் ஹக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு நடைபெறுகிறது.

1. 1851ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு கடந்த 2014 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் இந்த மைதானத்தில் இதுவரை வரலாற்றில் 15 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் 7 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் பெற்றுள்ளன. 8 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன.

- Advertisement -

2. ரசிகர்கள் படுத்துக்கொண்டு பார்க்கும் வகையில் இயற்கை ரம்யத்துடன் அமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் வரலாற்றில் 11 போட்டிகளில் களமிறங்கிய நியூசிலாந்து 10 போட்டியில் வென்றுள்ளது. 1 போட்டியில் தோற்றது. ஆனால் இந்த மைதானத்தில் இதற்கு முன் விளையாடாத இந்தியா இப்போது தான் முதல் முறையாக விளையாடுவதால் கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது. மேலும் முதல் முறையாக இந்தியா இப்போது தான் விளையாடுவதால் இம்மைதானத்தில் பார்ப்பதற்கான புள்ளி விவரங்களும் இல்லை.

பிட்ச் ரிப்போர்ட்:
நியூசிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை போலவே அளவில் சிறியதாக இருக்கும் ஹக்லே ஓவல் மைதானம் வழக்கம் போல பேட்டிங்க்கு அதிக சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இயற்கையாகவே நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்பதால் அதை சரியாக கணிக்கும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை அடிக்கலாம்.

- Advertisement -

இருப்பினும் இப்போட்டி நடைபெறும் நாளன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதுடன் இது திறந்தவெளி மைதானம் என்பதால் புதிய பந்தை ஸ்விங் செய்யும் பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பார்கள். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 262 என்பதால் இது 300+ ரன்கள் கொண்ட போட்டியாக அமையலாம். மேலும் டாஸ் வெல்லும் கேப்டன்கள் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

வெதர் ரிப்போர்ட்:
முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதல் போட்டியிலிருந்து கடைசி போட்டி வரை விதவிதமாக வந்து 2 போட்டிகளை ரத்து செய்ய வைத்து ரசிகர்களை கடுப்பாக்கிய மழை இப்போட்டியிலும் தனது ஜாலத்தை காட்ட தயாராகியுள்ளது. ஏனெனில் கிறிஸ்ட்சர்ச் நகரில் போட்டி நடைபெறும் நவம்பர் 30ஆம் தேதியன்று காலை நேரத்தில் 10% என்ற அளவில் மட்டும் இருக்கும் மழைக்கான வாய்ப்பு உள்ளூர் நேரப்படி போட்டி துவங்கும் மதியம் 1 மணிக்கு 24% என உயர்கிறது. அதனால் இப்போட்டி டாஸ் போடப்பட்டு துவங்கும் என்று உறுதியாக நம்பலாம்.

ஆனால் மாலை 4 மணியளவில் 51% என அதிகரிக்கும் மழை இரவு 11 மணி வரை முறையே 56%, 54%, 52%, 59%, 42%, 36% என தொடர்ந்து சீராக பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக நியூசிலாந்து வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் இப்போட்டியும் முழுமையாக நடைபெறுவது சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் முடிந்த அளவுக்கு ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவு காண்பதற்கு நடுவர்கள் முயற்சிப்பார்கள். ஒருவேளை போட்டி ரத்தாகும் பட்சத்தில் நியூசிலாந்து கோப்பையை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement