இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 36 வருடங்கள் கழித்து வென்ற நியூசிலாந்து புனேவில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியிலும் மிரட்டி வருகிறது. அக்டோபர் 24ம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து போராடி 259 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்தரா 65, டேவோன் கான்வே 76 ரன்கள் எடுத்தனர்.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 3, வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை சாய்த்தனர். பின்னர் விளையாடிய இந்தியா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 38 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மிரட்டும் நியூஸிலாந்து:
அதன் பின் 103 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய நியூசிலாந்துக்கு கேப்டன் டாம் லதாம் நங்கூரமாக விளையாடினார். இருப்பினும் எதிர்ப்புறம் டேவோன் கான்வே 17, வில் எங் 23, ரவீந்திரா 9, டேரில் மிட்சேல் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய டாம் லாதம் அரை சதமடித்து 86 ரன்கள் குவித்த போது வாஷிங்டன் சுந்தர் சுழலில் அவுட்டானார்.
இறுதியில் முடிவுக்கு வந்த இரண்டாவது நாள் முடிவில் நியூசிலாந்து 198-5 ரன்கள் குவித்துள்ளது. களத்தில் டாம் பிளன்டல் 30*, கிளன் பிலிப்ஸ் 9* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் நியூசிலாந்து 301 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஒட்டுமொத்த வரலாற்றில் இந்தியாவில் ஒரே ஒருமுறை மட்டுமே 300க்கும் மேற்பட்ட இலக்கை ஒரு அணி சேசிங் செய்து வென்றுள்ளது.
அவமானத் தோல்வியா:
கடந்த 2008ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 387-4 ரன்கள் சேசிங் செய்து வென்றது. ஆனால் இங்கே இன்னும் 5 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள நியூசிலாந்தில் 400 ரன்களை இலக்காக நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. கூடவே புனே மைதானம் நாட்கள் செல்ல செல்ல பேட்டிங் செய்வதற்கு இன்னும் பாதகமாக மாறும். போதாக்குறைக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துகளை எதிர்கொள்ளத் தெரியாதவர்கள் போல் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தனர்.
இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கர் கூட செய்யாத சாதனையை 22 வயதில் செய்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – முதல் வீரராக சாதனை
அதனால் இப்போட்டியில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கே பிரகாச வாய்ப்புள்ளது. அப்படி தோற்றால் 2012க்குப்பின் 12 வருடங்கள் கழித்து இந்த தசாப்தத்தில் முதல் முறையாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அவமான தோல்வியை சந்திக்கும். அதற்கு தயாராகிக் கொள்ளுங்கள் என்ற வகையிலேயே இந்திய அணியினர் தற்போது விளையாடும் வருகின்றனர்.



