
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்தும் இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எஞ்சியுள்ள போட்டிகளை எங்கு நடத்தலாம் என்பது குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு பல்வேறு தடைகள் இருந்த போதும் தற்போது மீதியுள்ள போட்டிகளை நடத்தும் முடிவை மே 29-ஆம் தேதி பிசிசிஐ எடுக்க உள்ளதாக தெரிகிறது. அதன்படி மீதமுள்ள 31 போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்காக இங்கிலாந்து செல்ல உள்ளதால் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் இந்த ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி முதலாவதாக நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடி விட்டு அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஐந்தாவது போட்டிக்கு இடையே 9 நாட்கள் இடைவெளி இருப்பதால் அந்த இடைவெளி நாட்களை குறைத்துக் கொள்ளும்படி பிசிசிஐ கேட்டுக்கொண்டது.
ஏனெனில் அப்படி இடைவெளி குறையும் போது ஐபிஎல் தொடருக்கு ஏதுவாக போட்டி அட்டவணை அமைக்க கால அவகாசம் இருக்கும் என்பதால் பிசிசிஐ கடைசி டெஸ்ட் போட்டியை செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் முடிக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக்கொண்டது. ஆனால் இங்கிலாந்து நிர்வாகமும் தற்போது இந்த தொடரில் எந்தவித மாற்றமும் கிடையாது என்று கூறிவிட்டது.
மேலும் இங்கிலாந்து வாரியம் தற்போது அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாததால் இந்த டெஸ்ட் தொடரில் எந்த அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதி வரை இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 15ஆம் தேதி துவங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.