இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்டு 5-வது போட்டியில் இந்தியா ஜூலை 1-ஆம் தேதியன்று களமிறங்குகிறது. கடந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக துவங்கிய இந்த தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை சாய்த்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற போது கரோனா பரவல் ஏற்பட்டதால் பாதியில் நிறுத்தப்பட்டது. எனவே பர்மிங்காம் நகரில் தற்போது நடைபெறப்போகும் அந்த போட்டியில் வெல்வதற்கு இரு அணிகளும் போராட உள்ளன.
ஆனால் கடந்த முறை தடுமாறிய இங்கிலாந்து இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடியாக விளையாடும் வலுவான அணியாக மாறியுள்ளதால் 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் தலை நிமிர இந்தியாவுக்கு கடும் சவாலளிக்கும் வகையில் வெற்றிக்காக போராடும் உள்ளது. மறுபுறம் இம்முறை புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா முதல் முறையாக சவாலான இப்போட்டியின் வாயிலாக வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை வழிநடத்த காத்திருக்கும் நிலையில் கரோனா பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். அதனால் இப்போட்டியில் அவர் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எட்ஜ்பஸ்டனில் இந்தியா:
அதுபோக கேஎல் ராகுல் காயத்தால் விலகியது விராட் கோலி, புஜாரா போன்ற வீரர்களின் சுமாரான பார்ம் இந்தியாவுக்கு பின்னடைவை கொடுப்பதாக உள்ளது. இருப்பினும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட இந்தியா 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்று வெற்றி சரித்திரம் படைப்பதற்காக இப்போட்டியில் முழுமூச்சுடன் போராட தயாராகியுள்ளது. இந்த தருணத்தில் இப்போட்டி நடைபெறும் எட்ஜ்பஸ்டன் மைதானத்தை பற்றி பார்ப்போம்:
1. கடந்த 1882இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த மைதானத்தில் கடந்த 1902 முதல் 100 ஆண்டுகளுக்கு மேலாக பல சரித்திரம் வாய்ந்த டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
2. 24,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 28 வெற்றிகளை பதிவு செய்துள்ள இங்கிலாந்து தனது கோட்டையாக வைத்துள்ளது.
3. இந்த மைதானத்தில் இங்கிலாந்தை வரலாற்றில் இந்தியா இதுவரை 6 போட்டிகளில் சந்தித்துள்ளது. அந்த 6 போட்டிகளில் 3 இன்னிங்ஸ் வெற்றிகளைப் பெற்றுள்ள இங்கிலாந்து 2 சாதாரண வெற்றிகளை பெற்று இம்மைதானம் தனது கோட்டை என்று நிரூபித்து வருகிறது.
4. கடந்த 1986இல் முதலும் கடைசியுமாக கபில்தேவ் தலைமையிலான இந்தியா இங்கு போராடி 1 போட்டியை ட்ரா செய்தது. கடைசியாக கடந்து 2018ல் இங்கு நடந்த போட்டியில் கேப்டனாக இருந்த விராட் கோலி 149, 51 என 2 இன்னிங்சிலும் சேர்த்து 200 ரன்கள் அடித்து வெற்றிக்காக தனி ஒருவனாக போராடிய போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
புள்ளிவிவரங்கள்:
1. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்களின் பட்டியல்:
1. சுனில் கவாஸ்கர் : 216 ரன்கள்
2. விராட் கோலி : 200 ரன்கள்
3. சச்சின் டெண்டுல்கர் : 187 ரன்கள்
2. இந்த மைதானத்தில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய 2 இந்தியர்கள் மட்டுமே வரலாற்றில் சதத்தை பதிவு செய்துள்ளார்கள். அரை சதங்கள் என்று பார்த்தால் அதிகபட்சமாக சுனில் கவாஸ்கர் 3 அடித்துள்ளார். அதேபோல் கடந்த 2018இல் 149 ரன்கள் குவித்த விராட் கோலி இம்மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்தியராக முதலிடத்தில் உள்ளார்.
3. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்களாக சேட்டன் சர்மா மற்றும் எரப்பள்ளி பிரசன்னா ஆகியோர் முறையே 10 மற்றும் 8 விக்கெட்டுக்களுடன் முதல்2 இடங்களில் உள்ளனர். சேட்டன் சர்மா, கபில்தேவ், இஷாந்த் சர்மா ஆகிய 3 இந்தியர்கள் மட்டுமே இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்த பெருமை பெற்றுள்ளனர்.
பிட்ச் ரிப்போர்ட்:
இந்த மைதானம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுக்குமே சாதகமாக இருக்கும் என்பதால் திறமையை வெளிப்படுத்தும் யாரானாலும் இங்கு ஜொலிக்கலாம். இருப்பினும் முதல் சில நாட்களில் மழைக்கான வாய்ப்புடன் ஈரப்பதமான வானிலை நிலவும் என்பதால் அதைப் பயன்படுத்தி ஸ்விங் செய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். எனவே ஆரம்ப கட்டத்தில் கால சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நிதானமாக பேட்டிங் செய்து அதிக நேரம் விளையாடினால் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க முடியும்.
கடைசி சில நாட்களில் இங்கு வழக்கம்போல சுழல் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தை பார்க்கலாம். மேலும் இம்மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 308 ஆகும். எனவே முதலில் யார் பேட்டிங் செய்தாலும் முதல் இன்னிங்சில் 300 ரன்களை தாண்ட வேண்டியது வெற்றிக்கு அவசியமாகும்.
இதையும் படிங்க : புதிய கிரிக்கெட் தொடரின் கோப்பைக்கு கிறிஸ் கெயிலின் பெயர் – ரசிகர்கள் வியக்கும் முழுவிவரம்
முதல் நாளில் வேகப்பந்து வீச்சு அதிகமாக எடுபடும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானித்து ஆரம்பத்திலேயே எதிரணிக்கு அழுத்தத்தை போடுவது வெற்றிக்கு வித்திடலாம்.