IND vs ENG : கையில் இருந்த வெற்றியை கோட்டை விட்ட இந்திய அணி. இங்கிலாந்து அபாரம் – தோல்விக்கான காரணம் என்ன?

Joe Root Jonny Bairstow Rishabh Pant IND vs ENg
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்ற 5-வது டெஸ்ட் போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கியது. கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை மண்ணை கவ்வ வைத்து 4 போட்டிகளின் முடிவில்  2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியே தற்போது பர்மிங்காமில் நடைபெற்றது. இருப்பினும் இம்முறை புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவான மாறியுள்ள இங்கிலாந்தை சமாளிக்க இந்திய தரப்பில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா கடைசி நேரத்தில் விலகியதால் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவை வழி நடத்தினார்.

அந்த நிலைமையில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் போராடி 416 ரன்கள் சேர்த்தது. ஏனெனில் கில் 17, புஜாரா 13, விஹாரி 20, ஷ்ரேயஸ் ஐயர் 15, விராட் கோலி 11 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 98/5 என திணறிய இந்தியா 200 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. நல்ல வேளையாக 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் – ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மூழ்கிய இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தினர்.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
அதில் டி20 இன்னிங்ஸ் போல அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்து 146 ரன்களும் மெதுவாக பேட்டிங் செய்த ஜடேஜா சதமடித்து 104 ரன்களும் குவித்தனர். கடைசியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை பறக்கவிட்ட ஜஸ்பிரித் பும்ரா உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து பும்ரா உள்ளிட்ட இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் வெறும் 284 ரன்களுக்கு சுருண்டது. லீஸ் 6, கிராவ்லி 9, போப் 10, ரூட் 31, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 25, பென் போக்ஸ் 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக சதமடித்த ஜானி பேர்ஸ்டோ 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அதனால் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியாவுக்கு கில் 4, விஹாரி 11, விராட் கோலி 20, ஷ்ரேயஸ் ஐயர் 19 என முக்கிய பேட்ஸ்மேன்கள் 2-வது வாய்ப்பிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டதால் வெறும் 245 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அனுபவத்தைக் காட்டிய புஜாரா அதிகபட்சமாக 66 ரன்களும் அவருடன் நிதானமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 57 ரன்கள் குவித்து போராடி அவுட்டானார்கள். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

மிரட்டிய இங்கிலாந்து:
இறுதியில் 378 என்ற பெரிய இலக்கை துரத்திய இங்கிலாந்து இம்முறை இந்திய பந்து வீச்சுக்கு வளைந்து கொடுக்காமல் ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து மிரட்டியது. குறிப்பாக தொடக்க வீரர்களின் அதிரடியால் 107 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த அணி ஆரம்பத்திலேயே அச்சுறுத்தியது. அப்போது அலெஸ் லீஸ் 56, ஜாக் கிராவ்லி 47, ஓலி போப் 0 என 3 பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து அவுட் செய்த இந்தியா போட்டியை தனது பக்கம் திருப்பியது. ஆனால் அடுத்ததாக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜோ ரூட் ஆகியோர் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நிதானமாக ரன்களைச் சேர்த்ததால் 4-வது நாளிலேயே இந்தியாவின் வெற்றி பறிபோனது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து இன்று துவங்கிய 5-வது நாளில் வெற்றிக்கு 100 ஓவரில் 119 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்த ஜோ ரூட் சதமடித்து 142* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 114* ரன்களும் எடுத்து சூப்பர் பினிசிங் கொடுத்தனர். அதனால் 378/3 ரன்களை எடுத்த இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்த சொந்த மண்ணில் எப்போதுமே நாங்கள் கில்லி என்று நிரூபித்தது.

பறிபோன வெற்றி:
மறுபுறம் இந்த முக்கிய போட்டியின் முதல் 3 நாட்களில் அபாரமாக விளையாடிய இந்தியா வெற்றியை தன்வசம் வைத்திருந்த போதிலும் கடைசி 2 நாட்களில் சுமாராக செயல்பட்டு தாரை வார்த்தது. குறிப்பாக முதல் இன்னிங்சில் 98/5 என்று சறுக்கிய போதும் போராடி 416 ரன்கள் பின்னர் இங்கிலாந்தை அதன் முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு சுருட்டியதால் 132 ரன்கள் முன்னிலையாக பெற்ற காரணத்தால் 400 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2-வது இன்னிங்சில் புஜாரா, பண்ட் ஆகியோரைத் தவிர இதர பேட்ஸ்மேன்கள் அசாட்டாக அஜாக்கிரதையாக விளையாடியதால் 245 ரன்களுக்கு இந்தியா சுருண்டது. அதேபோல் பந்து வீச்சிலும் 2-வது இன்னிங்சில் கேப்டன் பும்ராவை தவிர ஏனைய இந்திய பவுலர்களும் சுமாராகவே செயல்பட்டனர்.

அதேசமயம் சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளிலும் அந்த அணி நிர்ணயித்த 250க்கும் மேற்பட்ட இலக்கை அசால்டாக சேஸிங் செய்து பென் ஸ்டோக்ஸ் – பிரண்டன் மெக்கலம் தலைமையில் அதிரடியான வெற்றிகளை குவிக்க துவங்கியுள்ள இங்கிலாந்துக்கு முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து 378 ரன்களை தூசி போல சேஸிங் செய்து விட்டனர். மறுபுறம் கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்ட இந்தியா 2007க்கு பின்பு 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவை நிஜமாக்க தவறியது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

Advertisement