இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணியை மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வீழ்த்தியது. அதனால் இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
அதன் காரணமாக 2 – 1* என்ற கணக்கில் இருக்கும் இந்தத் தொடரில் 4வது போட்டியில் தவறை திருத்திக் கொண்டு வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற இந்திய அணி தயாராகியுள்ளது. மறுபுறம் கடந்தப் போட்டியில் பெற்ற வெற்றியின் உத்வேகத்துடன் 4வது போட்டியிலும் வென்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து தயாராகியுள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நான்காவது போட்டி ஜனவரி 31ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருக்கும் எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7:00 மணிக்குத் துவங்குகிறது.
புனே மைதானம்:
2012ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 42000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்ட இந்த மைதானத்தில் இதுவரை 4 டி20 போட்டிகள் நடைபெற்று உள்ளது. அந்த 4 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா வெறும் 1 வெற்றி 3 தோல்விகளை சந்தித்துள்ளது. 2012இல் இங்கிலாந்துக்கு எதிராக அந்த ஒரு வெற்றியைப் பெற்ற இந்தியா 12 வருடங்கள் கழித்து மீண்டும் அந்த அணியை இம்மைதானத்தில் சந்திக்கிறது.
வெதர் ரிப்போர்ட்:
புனே நகரில் இம்மைதானத்தைச் சுற்றிய பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இந்தப் போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
புனே மைதானத்தில் இருக்கும் பிட்ச் வரலாற்றில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. அதே சமயம் இந்த மைதானத்தின் பவுண்டரி அளவுகள் மிகவும் சிறியதாகும். எனவே அதைப் பயன்படுத்தி சூழ்நிலைகளை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கக்கூடும்.
இதையும் படிங்க: 150 கி.மீ வேகத்தில் நட்பு எங்க இருக்கு? தாதா இல்லாம இந்திய கிரிக்கெட்டே இல்ல.. கங்குலி – அக்தர் நெகிழ்ச்சி
இப்போட்டி இரவு நேரத்தில் நடைபெறுவதால் வேகப்பந்து வீச்சாளர்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 166 ஆகும். இங்கு வரலாற்றில் 2 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 2 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. அதனால் இங்கே டாஸ் வெல்லும் கேப்டன் எந்த முடிவை எடுத்தாலும் வெற்றிக்கு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியமாக பார்க்கப்படுகிறது.



