- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ENG : 2 ஆவது போட்டியிலும் அசத்தி பழிதீர்த்த இந்திய அணி. தொடரை கைப்பற்றி அசத்தல் – நடந்தது என்ன?

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றது. ஜூலை 7-ஆம் தேதியன்று துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2-வது போட்டி ஜூலை 9-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு பர்மிங்காம் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரிஷப் பண்ட் முதல் முறையாக ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கினார்.

பவர்ப்ளே ஓவர்களில் அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்ட இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் குவித்தபோது 3 பவுண்டரி 2 சிக்சருடன் 31 (20) ரன்களில் ரோஹித் சர்மா அவுட்டாக அடுத்து வந்த விராட் கோலி 1 (3) ரன்னில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார். அடுத்த பந்திலேயே 4 பவுண்டரி 1 சிக்சருடன் 26 (15) ரன்களில் ரிஷப் பண்ட்டும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க மிடில் ஆர்டரில் வந்த சூர்யகுமார் யாதவ் 15 (11) ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 12 (15) ரன்களிலும் 10-வது ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி கொடுத்தனர்.

- Advertisement -

அசத்திய ஜடேஜா:
அதனால் 89/5 என தடுமாறிய இந்தியா 150 ரன்களை தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட போது மெதுவாக பேட்டிங் செய்து காப்பாற்ற முயன்ற தினேஷ் கார்த்திக்கும் 12 (17) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அந்த மோசமான நிலைமையில் அவருடன் பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா கடைசி வரை அவுட்டாகாமல் போராடி 5 பவுண்டரியுடன் அதிரடியாக 46* (29) ரன்கள் குவித்து இந்தியாவைக் காப்பாற்றினார். அவருடன் ஹர்ஷல் படேல் முக்கியமான 13 (6) ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா போராடி 170/8 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் ஜோர்டன் 4 விக்கெட்கள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 171 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜேசன் ராய் கோல்டன் டக் அவுட் செய்த புவனேஸ்வர் குமார் 3-வது ஓவரில் கேப்டன் ஜோஸ் பட்லரை 4 (5) ரன்களில் காலி செய்து இந்தியாவுக்கு அற்புதமான தொடக்கம் கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே அதிரடி பேட்ஸ்மேன் லியம் லிவிங்ஸ்டனை 15 (9) ரன்களில் ஜஸ்பிரித் பும்ரா கிளீன் போல்டாக்கினார். அடுத்த சில ஓவர்களில் சாஹலிடம் சிக்கிய ஹரி ப்ரோக் 8 (9) ரன்களில் நடையை கட்டியதால் 41/4 என்ன மோசமான தொடக்கத்தை பெற்ற இங்கிலாந்து டேவிட் மாலன் 19 (25) சாம் கரண் 2 (4) என மேலும் 2 முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 10.2 ஓவரில் 60/6 என மொத்தமாக சறுக்கியது.

- Advertisement -

பழிதீர்த்த இந்தியா:
அந்த சமயத்தில் அதிரடியாக விளையாடி காப்பாற்ற முயன்ற மொயீன் அலியும் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (21) ரன்களில் ஆட்டமிழக்க கடைசியில் டேவிட் வில்லி அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 33* (22) ரன்கள் எடுத்து போராடினாலும் எதிர்ப்புறம் வந்த பேட்ஸ்மேன்கள் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 121 ரன்களுக்குள் சுருண்டது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சஹால் அது ஒரு தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

அதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்தை இம்முறை கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதுமே அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து தக்க பதிலடி கொடுத்து பழிக்கு பழி தீர்த்துள்ளது. இதனால் நாளை நடைபெறும் கடைசி போட்டியிலும் வென்று ஒயிட் வாஷ் வெற்றியை பதிலுக்கு இந்தியா பரிசளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இப்போட்டியில் டாஸ் தோற்றாலும் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் உதவியால் போராடும் அளவுக்கு 170 ரன்களை சேர்த்தது. அத்துடன் இங்கிலாந்தின் பலமே அந்த அணியின் நட்சத்திர அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என்பதை நன்கு உணர்ந்து முதல் போட்டியை போலவே ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன் ஆகிய 3 வெறித்தனமான பேட்ஸ்மேன்களை பவர்ஃபிளே ஓவர்கள் முடிவதற்குள் புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் கச்சிதமாக பந்துவீசி ஆரம்பத்திலேயே கதையை முடித்தனர்.

அதனால் விக்கெட்டுகளையும் இழந்து ரன்ரேட்டையும் கட்டுக்குள் வைக்க தவறியதால் ஏற்பட்ட இரட்டை அழுத்தத்தால் தடுமாறிய இங்கிலாந்தை மிடில் ஆர்டரில் அதிரடி காட்டி காப்பாற்ற முயன்ற மாலன், மொய்ன் அலி, ஹரி ப்ரூக் என அனைத்து பேட்ஸ்மேன்களையும் சஹால், பாண்டியா, ஹர்சல் படேல் ஆகிய இந்திய பவுலர்கள் துல்லியமான பந்துவீசி மடக்கி பிடித்தனர். மொத்தத்தில் இப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா ரசிகர்களை மீண்டும் தலை நிமிர வைத்துள்ளது.

- Advertisement -
Published by