WTC Final : ஓவல் மைதானம் எப்படி? மழை வருமா – இந்தியாவின் வரலாற்று புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

THE OVAL Cricket Ground London Stadium
- Advertisement -

உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் 2021 முதல் நடைபெற்ற வந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா 2வது இடம் பிடித்த இந்தியாவை எதிர்கொள்கிறது. கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று பாடத்தைக் கற்றுள்ள இந்தியா இம்முறை கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

மறுபுறம் ஐசிசி ஃபைனல்களில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ள ஆஸ்திரேலியா இந்த கோப்பையையும் வெல்ல முயற்சிக்க உள்ளது. ஐசிசி தரவரிசையில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் என ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருப்பதால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

ஓவல் மைதானம்:
கடந்த 1880ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதிய உலகின் முதல் டெஸ்ட் போட்டி இந்த மைதானத்தில் தான் நடைபெற்றது. அந்தளவுக்கு நூற்றாண்டை கடந்த பழமையான இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 104 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 37 முறையும் சேசிங் செய்த அணிகள் 29 முறையும் வென்ற நிலையில் 37 போட்டிகள் டிராவில் முடிந்தன. மேலும் டாஸ் வென்ற அணிகள் 36 போட்டியிலும் தோற்ற அணிகள் 30 போட்டிகளிலும் வென்றுள்ளன.

1. இந்த மைதானத்தில் இதுவரை 14 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியா 2 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தன. கடைசியாக 2021இல் இங்கு ரோஹித் சர்மாவின் சதத்தால் இங்கிலாந்தை 50 வருடங்கள் கழித்து இந்தியா வீழ்த்தியது.

- Advertisement -

2. மறுபுறம் இங்கு 38 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா வெறும் 7 வெற்றிகளை பெற்று 17 தோல்விகளை சந்தித்துள்ளது. 14 போட்டிகள் டிராவில் முடிந்தன. கடைசியாக 2019இல் இங்கிலாந்துக்கு எதிராக வென்ற நிலையில் இவ்விரு அணிகளும் இப்போது தான் முதல் முறையாக இந்த மைதானத்தில் மோதுகின்றன.

3. இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் (443), அதிக சதங்கள் (2) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (217, இங்கிலாந்துக்கு எதிராக, 2002) பதிவு செய்த இந்திய வீரராக தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளார்.

- Advertisement -

4. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலராக ரவீந்திர ஜடேஜா (11*) உள்ளார். சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் : பிஎஸ் சந்திரசேகர் – 6/38, இங்கிலாந்துக்கு எதிராக, 1972.

Oval

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் லண்டனை சுற்றிய பகுதிகளில் முதல் 3 நாட்களில் மழைக்கான வாய்ப்பில்லை என இங்கிலாந்து வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக 22 டிகிரி வெப்பத்துடன் முதல் 3 நாட்களில் தெளிவான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இருப்பினும் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் பகல் நேரத்தில் சராசரியாக முறையே 50%, 70% மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவிக்கிறது. இதனால் இப்போட்டியில் கடைசி 2 நாட்கள் முழுவதுமாக நடைபெறுமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. அதனால் இப்போட்டி ரிசர்வ் நாள் வரை செல்வதற்கு வாய்ப்புள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:
வழக்கமான இங்கிலாந்து சூழ்நிலைக்கேற்ப நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் கொண்ட மைதானமாக ஓவல் இருந்து வருகிறது. அதே சமயம் இங்கிலாந்தின் இதர மைதானங்களை காட்டிலும் ஓவல் ஸ்பின்னர்களுக்கு அதிக சாதகமாக கைகொடுத்து வருகிறது. எனவே இந்த போட்டியின் முதல் 3 நாட்களில் வேகப்பந்து வீச்சாளர்களும் கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்களும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

அதே சமயம் இங்கிலாந்தின் வானிலை அடிக்கடி மாறக்கூடியது என்ற நிலையில் கடைசி 2 நாட்களில் மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலை நிலவினால் ஸ்பின்னர்களை விட ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மறுபுறம் இந்த சூழ்நிலைகளில் அவசரப்படாமல் நிலைத்து நின்று பிட்ச் தன்மை மற்றும் எதிரணி பவுலர்களை புரிந்து கொண்டு நங்கூரமாக நிற்கும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை அடிக்கலாம்.

இதையும் படிங்க:WTC Final : ரொம்ப ஜாலியா இருக்காதீங்க. பைனலுக்கு முன்னர் இந்திய பாஸ்ட் பவுலர்களுக்கு அறிவுரை வழங்கிய – வாசிம் அக்ரம்

343, 304, 238, 156 என்பது இந்த மைதானத்தில் சராசரி 4 இன்னிங்ஸ்களின் ஸ்கோராகும். அந்த நிலையில் கடைசி 2 நாட்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் இதற்கு முன் முதலில் பேட்டிங் செய்த அணிகள் அதிக போட்டிகளில் வென்றுள்ளதாலும் இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement