
இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தங்களை டி20 உலக சாம்பியன் என நிரூபித்து 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் பந்து வீச்சில் மொத்தமாக சொதப்பிய இந்தியா தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 என நிரூபித்து சொந்த மண்ணில் தலை நிமிர கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் போட்டியில் பேட்டிங்கில் குறை சொல்ல முடியாத அளவுக்கு 208 ரன்களை குவித்த இந்தியா பௌலிங் மற்றும் ஃபீல்டிங் துறைகளில் சொதப்பியதால் தோல்வி பரிசாக கிடைத்தது.
எனவே 2வது போட்டியிலிருந்து அந்தத் துறைகளில் கச்சிதமாக செயல்பட்டு இத்தொடரில் கொதித்தெழுந்து கோப்பையை வென்று ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் நாங்கள் எப்போதும் ராஜா என்று நிரூபிக்க இந்தியா போராட உள்ளது. அந்த வகையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி செப்டம்பர் 23ஆம் தேதியன்று மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் இரவு 7 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியை முன்னிட்டு நாக்பூரில் இருக்கும் வாதோதரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தை பற்றி பார்ப்போம்:
1. விசிஏ என்றழைக்கப்படும் இம்மைதானம் கடந்த 2008இல் தோற்றுவிக்கப்பட்டு 2009 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வருகிறது. 45000 ரசிகர்களுக்கு மேல் ஒரே நேரத்தில் அமர்ந்து நேரடியாக போட்டிகளை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் வரலாற்றில் 12 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன.
2. அதில் 9 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. ஆச்சர்யப்படும் வகையில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன.
3. குறிப்பாக கடந்த 2016 உலக கோப்பையில் மட்டும் 9 போட்டிகள் இங்கு நடைபெற்ற நிலையில் வரலாற்றில் இந்த மைதானத்தில் இந்தியா 4 போட்டிகளில் களமிறங்கியுள்ளது. அதில் 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ள இந்தியா இம்மைதானத்தில் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறது. மேலும் இம்மைதானத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை இம்முறை இந்தியா எதிர்கொள்கிறது.
புள்ளி விவரங்கள்:
1. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் 2 போட்டிகளில் 123 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். இங்கு ஒட்டுமொத்தமாக வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் சதமடித்தது கிடையாது என்ற நிலைமையில் அதிகபட்சமாக இந்தியாவின் கேஎல் ராகுல் 2 அரை சதங்கள் அடித்துள்ளார். இங்கு அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய வீரராகவும் அவரே (71) உள்ளார்.
2. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளராக தீபக் சஹர் 6 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
3. கடந்த 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக இங்கு நடைபெற்ற போட்டியில் வெறும் 7 ரன்கள் மட்டும் கொடுத்து ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை எடுத்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலர் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்து இந்திய பவுலர் ஆகிய 2 சாதனைகள் படைத்ததை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.
வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாக்பூரில் போட்டி நாளன்று காலையில் மழைக்கான வாய்ப்பு இருந்தாலும் நேரம் செல்ல செல்ல வாய்ப்புகள் குறையும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதாவது இப்போட்டி நடைபெறும் இரவு நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் குறைவான அளவு மழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதனால் இப்போட்டியின் முடிவு உறுதியாகக் கிடைக்கும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாக்பூர் மைதானம் வரலாற்றில் பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருந்து வருகிறது. இருப்பினும் இங்கு வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 12இல் 9 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் ஆரம்ப கட்ட சவாலான சூழ்நிலைகளை சமாளித்து 160+ ரன்கள் எடுத்தால் இங்கே வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ஏனெனில் இந்த மைதானத்தில் 2வது இன்னிங்சில் சராசரி ஸ்கோர் வெறும் 128 ஆகும். எனவே திறமையை வெளிப்படுத்தும் யாராக இருந்தாலும் இங்கு அசத்தலாம் என்றாலும் அரிதாக இம்மைதானத்தில் சேசிங் செய்வது கடினமாக பார்க்கப்படுகிறது. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்தால் வெற்றி நிச்சயம் என்று கூறலாம்.